மோடி ஜெபித்துள்ள அதே ஊழல் மந்திரம்… இனியும் கிடைக்குமா மக்களின் வரம்?

2 ஜி:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது (2009 -14) ஆட்சி காலத்தின் இரண்டாம் பாகத்தில் 2ஜி அலைக்கற்றை முறைகேடு, நிலக்கரி இறக்குமதியில் ஊழல், காமன்வெல்த் போட்டிகளை நடத்தியதில் முறைகேடு என மத்திய காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் வரிசைக்கட்டி நின்றன.

இதுதான் சரியான தருணம் என்று காங்கிரஸ் அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மக்கள் மன்றத்தில் பாஜக ஒருபுறம் உரக்க எடுத்துரைக்க, மறுபுறம் அன்னா ஹசாரே தலைமையில் ஊழலுக்கு எதிரான இயக்கத்துக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. மோடி. அன்னா ஹசாரே ஆகிய இருவரது குரலின் வலிமையில் காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்தது. அன்று முதல் இன்று வரை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மீது ஊழலுக்கு எதிரான மத்திய பாஜக அரசின் அதிரடி ஆக்ஷன்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.

ராகுல் முதல் சஞ்சய் ராவத் வரை: ‘
நேஷனல் ஹெரால்டு’ முறைகேடு வழக்கில் சோனியா, ராகுல் இடம் அமலாக்கத் துறை அவ்வபோது நடத்திவரும் பல மணி நேர விசாரணையாக இருக்கட்டும்; சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதாக இருக்கட்டும். ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற ஒற்றை மந்திரச் சொல்லை கொண்டு, எதிர்க்கட்சியினரை பாஜக உண்டு, இல்லை என்று ஆக்கி வருகிறது.

கட்சி நன்கொடை மறைமுக லஞ்சம் ஆகாதா?:
அதேசமயம், பெரு முதலாளிகளிடம் இருந்து கட்சி நன்கொடையாக மட்டும் பாஜகவுக்கு பல்லாயிரம் கோடிகள் மதிப்பில் நிதி குவிந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு அரசாங்கமே கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து கட்சிக்காக கைநீட்டி காசு வாங்குவது மறைமுகமாக லஞ்சம் பெறுவது போல் ஆகாதா? அப்படி அவர்களிடம் பணம் பெற்ற பிறகு நிர்வாக ரீதியாக அவர்கள் செய்யும் பல்வேறு தவறுகளை தட்டிக்கேட்கும் உரிமையை ஒரு அரசாங்கம் தார்மீக ரீதியாக இழந்துவிடாதா?

ஒரு கட்சிக்கு தாங்கள் கொடுக்கும் நிதிக்கு கைமாறாக அரசின் பல கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு தி்ட்டங்களை செயல்படுத்தும் வாய்ப்பை இளம் தொழில் முனைவோர்களிடம் இருந்து கார்ப்பரேட்டுகள் எளிதி்ல் தட்டி்ப் பறித்துவிடமாட்டார்களா? என்பன போன்ற மத்திய பாஜக அரசுக்கு எதிரான குரல்களும் அவ்வபோது எழுந்து கொண்டிருந்தாலும் மக்கள் மன்றத்தில் அந்த குரல்கள் பெரிய அளவி்ல் கவனம் பெற்றதாக தெரியவில்லை.

எடுபடாமல் போன 5 ஜி குற்றச்சாட்டு:
இதேபோன்று, திமுக எம்பியும், 2 ஜி முறைகேடு வழக்கில் மத்திய அமைச்சர் பதவியும் இழந்தவருமான ஆ.ராசா, மத்திய பாஜக அரசு அண்மையில் நடத்திய 5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதாக அண்மையில் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அவரது குற்றச்சாட்டில் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்கள் இருந்தாலும், 2 ஜி விவகாரத்தால் ஆட்சியை இழந்த காங்கிரஸ் உள்ளிட்ட எந்த எதிர்க்கட்சிகளும் 5 ஜி ஏலம் குறித்த ஆ.ராசாவின் குற்றச்சாட்டை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு செல்லவில்லை.

மக்களின் ஆசீர்வாதத்தை கேட்கும் மோடி:
இத்தகைய சூழலில்தான், ‘குடும்ப அரசியல்தான் ஊழலுக்கு வழிவகுக்கிறது;ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க மக்கள் ஆசிர்வாதம் அளிக்க வேண்டும்’ என்று இன்றைய தமது சுதந்திர தின உரையில் முழங்கி உள்ளார் பிரதமர் மோடி. 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடியே மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கம்போல் இன்று ஊழல் மந்திரத்தை ஜெபித்து, மக்களின் ஆசிர்வாதத்தை வேண்டியுள்ளார் நமது பிரதமர்.

என்ன செய்ய போகின்றன எதிர்க்கட்சிகள்?
கார்ப்பரேட்டுகளிடம் இருந்து பாஜகவுக்கு கோடிகளில் குவியும் கட்சி நிதியில் தொடங்கி, வேலைவாய்ப்பின்மை, பெட்ரோல், டீசல் விலையேற்றம், சர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி மோடி தலைமையிலான பாஜக அரசின் மீது கூற குற்றச்சாட்டுகள் பல இருந்தாலும், இவற்றை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெகுஜன மக்கள் மத்தியில் சரியாக கொண்டு செல்கிறார்களா? அல்லது இனி எப்படி இவற்றை ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் மக்கள் மன்றத்தில் கொண்டு போக உள்ளனர்? என்பதை பொறுத்தே 2024 தேர்தல் முடிவு அமையும்; இல்லையென்றால் இன்றும் அதே ஊழல் மந்திரத்தை ஜெபித்துள்ள மோடிக்கு, மக்களின் ஆசிர்வாதம் தொடர்ந்து கிடைத்தாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.