எம்பி, எம்.எல்.ஏக்களுக்கும் தேசிய கொடி ஏற்றும் உரிமை: ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்!

நாடு முழுவதும் 75ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உடையாற்றினார். அதேபோல், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் மூவர்ண கொடியேற்றினார். இரண்டாவது ஆண்டாக முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக, இந்தியா விடுதலை பெற்ற பின்பு, ஜனவரி 26ஆம் தேதி குடியரசு நாளன்று நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவரும், ஆகஸ்ட்15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பிரதமரும் டெல்லியில் தேசிய கொடியை ஏற்றி வந்தனர். ஆனால் மாநில தலைநகர்களில் அந்த இரண்டு நாள்களிலும் ஆளுநரே தேசிய கொடியை ஏற்றி வந்தார்.

இந்த நிலையில், 1969ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி மாலையில் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற விடுதலை நாள் விழாவில் பேசிய அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, ஆகஸ்ட் 15ஆம் தேதி மாநில தலைநகரங்களில் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை முதலமைச்சர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.

மத்திய அரசும் கலைஞர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று “மாநில தலைநகரங்களில் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு நாளன்று ஆளுநர்களும், ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்களும் தேசிய கொடியை ஏற்றுவார்கள்” என்று ஆணை பிறப்பித்தது.

இதையடுத்து, 1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொடி மரத்தில் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி தேசிய கொடியை ஏற்றினார். எனவே விடுதலை நாளன்று செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதன் முதலாக தேசிய கொடி ஏற்றிய பெருமை கலைஞரையே சாரும். கலைஞர் பெற்றுத் தந்த இந்த உரிமையால் தான், இந்தியாவில் உள்ள எல்லா மாநில முதலமைச்சர்களும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், தேசிய கொடி ஏற்றும் உரிமையை எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கும் வழங்க வேண்டும் என்று விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சுதந்திர நாளன்று, மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கலைஞர் ஆவார். அதேபோன்று மாவட்டங்களில் ஆட்சியர்களுக்குப் பதிலாக மக்கள் பிரதிநிதிகள் தேசிய கொடியேற்றும் உரிமையை தமிழ்நாடு முதலமைச்சர் உறுதிசெய்ய வேண்டும்.

குடியரசு தினத்தில் மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடி ஏற்றவும், சுதந்திர தினத்தில் நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்கள் தேசிய கொடி ஏற்றவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். சுதந்திரதின பவளவிழா நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் பரிசீலனைக்கு இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.