(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் – தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினெட்டாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர்)
கட்டுரையின் தலைப்பை பார்த்ததும் நீங்கள் யோசிக்க தொடங்கி இருக்கக்கூடும். ஆனால், 320 ஆண்டுகளுக்கு மேலாக பூமியில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் அறிவியலின் ‘ஆன்மா’ டி.என்.ஏவின் வியப்பளிக்கும் கதையை சுவாரஸ்யமான எடுத்துக்காட்டுகளுடன் அலசுகிறது இந்த கட்டுரை.
கருமுட்டையும் விந்தணுவும்
நம் உடல் கோடான கோடி செல்களால் ஆனது. செல்கள் தண்ணிரில் முறையாக அடுக்கப்பட்ட DNA (DeoxyriboNucleic Acid), RNA (RiboNucleic Acid), புரதம், மாவு மற்றும் கொழுப்புப் பொருட்களாலானது. ஒரு செல் வளர்ந்து இரண்டாவதைச் செல்பிரிதல் (Cell cycle/mitosis) என்று அழைக்கப்படுகிறது. இந்த செல்பிரிதலில் பல நிலைகள் உண்டு. ஒவ்வொரு நிலையாகப் பயணித்து ஒரு செல் இரண்டாகிறது. பிரிந்த செல்கள் கிடைக்கிற உணவைப் பயன்படுத்தி முதலில் தன்னை வளர்த்துக் கொள்கின்றன.
இரண்டாவதாக தன் உட்கருவிலுள்ள (Nucleus) மரபணுவான DNA முழுவதையும் நகலெடுக்க ஆரம்பிக்கிறது. இந்த DNA ஒரு இரட்டை இழை சங்கிலித் தொடராகும். இவற்றில் சுமார் 320 கோடி ஜோடி சங்கிலி இணைப்புகள் (Nucleotides) உள்ளன.
இவை நான்கு மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தில் நகலெடுக்கப்படுகின்றன. அதாவது ஒரு வினாடிக்கு சுமார் 2 லட்சத்து 23 ஆயிரம் இணைப்புகள் உருவாக்கப்படுகின்றன! நம்மில் பலருக்கும் சோம்பேறித்தனம் இருக்கலாம். ஆனால் நம் அனைவரின் செல்களும் சுறுசுறுப்பானவை. இவை குதூகலத்துடன் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் இந்த வேலையைச் செய்து முடிக்கின்றது! இந்த பிரபஞ்சத்திலுள்ள அதிசயங்களில் இதுவும் ஒன்று. கருவளர்ச்சியின் போது இதன் வேகம் இன்னும் அதிகமாகி சில நிமிடங்களிலேயே இந்த வேலை செய்து முடிக்கப்படுகிறது என்றால் நினைத்துப் பாருங்கள் அதன் வேகத்தை…
DNA உற்பத்தி செய்யப்பட்ட பின் உட்கருவில் 96 துண்டுகளாக இந்த DNA இருக்கிறது. இவற்றை ஒன்றிணைத்தால் இந்த DNAவின் நீளம் சுமார் இரண்டு மீட்டருக்கும் மேலிருக்கும்! அதாவது ஒரு தாவணியின் நீளம் இது. ஆனால் இந்த DNAவின் அகலம் வெறும் 20 நானோ மீட்டர்தான். 1,000 நானோ மீட்டர் ஒரு மைக்ரானாகும். மூன்று மைக்ரான் அளவிலுள்ள உட்கருவில் இரண்டு மீட்டர் நீளமுள்ள DNA திணித்து வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு யானையைப் பிடித்துத் தீப்பெட்டிக்குள் அடைப்பதற்குச் சமமாகும்! இந்த DNA இழைகள் நூற்கண்டில் முறையாகச் சுற்றப்பட்ட நூலிழை போல் பக்குவமாகச் சுற்றி வைக்கப்பட்டுள்ளதால்தான் இது சாத்தியமாகிறது.
இறுதியாக இந்த DNA நகல்கள் சரிபாதியாகப் பிரித்தெடுக்கப்பட்டு இரண்டு செல்கள் உருவாக்கப்படுகின்றன. மேலும் தந்தையின் விந்தணுவில் உள்ள DNA தாயின் கருமுட்டையிலுள்ள DNAவுடன் இணைவதால் குழந்தையாக உருவாகிறது. பின்னர் இந்த DNAதான் குழந்தைகளையும் இயக்குகிறது. இவ்வாறாக DNA எண்ணற்ற தலைமுறைக்குத்தாவும் வல்லமை படைத்தது. பூமியில் 320 நூறு கோடி ஆண்டுகளுக்கும் மேலாக DNA இந்தப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன் விளைவாகவே பூமியில் எண்ணற்ற வகையான உயிரினங்கள் தோன்றின. பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களும் ஒருதாய் மக்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.
நவீன தொழில்நுட்பம் விளக்குவது என்னவென்றால், மனிதனின் DNA எந்த மற்ற உயிரின் உடலிலும் நிலைத்திருக்கும் வல்லமை படைத்தது. அதே மாதிரி எந்த உயிரின் DNAவும் மனித உடலில் நிலைத்திருக்கவும் முடியும். மேலும் உடலுக்கு வெளியேவும் இந்த DNA நிலைத்திருக்கும் சக்தியுடையது. இந்த DNAவுக்கு அழிவில்லை! மேற்கண்ட இந்த காரணங்களால், DNA உயிரிகளின் ஆன்மா எனலாம்.
- உங்களது எதிர்காலத்தை மாற்றப்போகும் 4 தொழில்நுட்பங்கள் – அசர வைக்கும் தகவல்கள்
- வசியம் செய்யும் உயிரிகளின் பிரமிக்க வைக்கும் வரலாறு
- கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட்டில் வேலைக்கு சேர என்ன படிக்க வேண்டும்? எப்படி தயாராவது?
டி.என்.ஏ எவரெஸ்ட் சிகரத்தை விட வலிமையானதா?
உலகின் உயரமான எவரேஸ்ட் சிகரத்தை விட DNA பலவழிகளில் வலிமையானது. எவரேஸ்ட் தோன்றி வெறும் 2 கோடி ஆண்டுகள் மட்டுமேயாகிறது. ஒரு வலிமையான பூகம்பத்தால் இந்த சிகரம் எந்நேரமும் அழிக்கப்படலாம். மேலும் பூமியின் மையவிலக்கு விசையினால் (Centrifugal Force) இந்த சிகரம் மேற்கொண்டு வளரவும் வாய்ப்பில்லை. ஆனால் இந்த DNA நாளுக்கு நாள் மென்மேலும் வலுவடைந்து கொண்டேதானிருக்கிறது.
அதனால் இமயத்தை விட ஆன்மாவான DNA வலிமை மிக்கது எனலாம்.
DNAவின் இத்தகைய வலிமைக்கு செல் பிரிதலிலுள்ள தலைசிறந்த கட்டுப்பாட்டுகளும் சட்டதிட்டங்களும்தான். ஆம், கட்டுப்பாட்டுகள் மற்றும் சட்டதிட்டங்களின்களின் படியே இந்த செல் பிரிதல் நடக்கிறது; நம் செல்களும் இயங்குகின்றன. இந்த செல்களின் இயக்கங்களே நம் இயக்கம். கடந்த நாற்பது ஆண்டு காலமாக ஆராய்ச்சியாளர்களின் கடின உழைப்பால் செல்களில் உள்ள சட்டதிட்டங்கள் பல கண்டறியப்பட்டுள்ளன.
பல வேதிப்பொருட்கள் நம் DNAவை உடைத்தெறியும் சக்தியைப் பெற்றுள்ளன. அவைகளில் உணவில் பயன்படுத்தும் சாயப்பொருட்களும், மாசடைந்த நீரில் உள்ள பல வேதிப்பொருட்களும், வாகனங்களின் மற்றும் பல தொழிற்சாலைகளின் புகையில் உள்ள வேதிப்பொருட்களும் அடக்கம். மேலும் சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள் மற்றும் ஏனைய கதிர்வீச்சுகளும் DNAவை சேதமடையச் செய்யும் சக்தி படைத்தவை. நன்றாக வயிறு புடைக்கச் சாப்பிட்டுவிட்டு போதிய உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையால் இவ்வகையான பல நச்சுப்பொருட்கள் தானாகவே நம் உடலில் உருவாகின்றன. இவையும் DNAவை அப்பளமாக நொறுக்கும் சக்தி படைத்தது.
தண்டவாளம் இரண்டு நெடிய நீளக் கம்பிகளால் ஆனது போல் இந்த DNAவும் இரண்டு நெடுநீள இழைகளால் ஆனதுதான். தண்டவாளத்தில் ஒரு ரயில் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் செல்வதாக நினைத்துக்கொள்ளுங்கள். அப்போது தண்டவாளத்தில் ஒரு இடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது என வைத்துக்கொள்வோம். இதனை ரயிலை இயக்குபவருக்கு ஏதாவது ஒருவழியில் தெரிந்தால் ரயிலை நிறுத்திவிடுவார். எல்லோரும் தப்பித்துக் கொள்ளலாம். பின்னர், பொறியாளர்கள் விரைவாக வரவழைக்கப்படுவார்கள், அவர்கள் தண்டவாளத்தில் உள்ள விரிசலைச் சரி செய்வார்கள். இரயில் பயணம் சில மணிநேரம் தாமதமாகும் அவ்வளவுதான்.
ரயிலை இயக்குபவருக்கு தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் தெரியவில்லை என்றால் ரயில் மிக மோசமான விபத்தைச் சந்திக்கும். பயணிகள் மோசமாகக் காயமடையவோ அல்லது உயிரிழக்கவோ வாய்ப்புகள் அதிகமுண்டு. இத்தனைக்கும் காரணம் உடைந்த தண்டவாளத்தில் ரயில் வேகமாக ஓடியதேயாகும்.
இப்போது DNAவை ரயில் தண்டவாளமாகவும், வேகமாகச் சென்று கொண்டிருக்கும் ரயிலை அதிவேகமாகப் பிரிதலுக்குப் பயணிக்கும் ஒரு செல்லாகவும் நினைத்துக் கொள்ளுங்கள். ரயில் தண்டவாளம் உடைந்தது போல், DNA உடைந்தால் செல்பிரிதல் என்ற பயணம் நிறுத்தப்படவேண்டும். காரணம் DNAதான் நம் உடல் கட்டமைப்பு மற்றும் அனைத்து இயக்கங்களின் தகவல்களைத் தாங்கியுள்ள திட்ட வரைபடமாகும் (Blue print). RNA, புரதம், மாவு மற்றும் கொழுப்புப் பொருட்கள் சேதமடைந்தால் பெரிதாக ஒன்றும் பிரச்னை வந்துவிடாது. காரணம் இவற்றைத் தயாரிக்கும் செய்முறைக் குறிப்பு DNAல் உள்ளது. அதனால் DNAல் உள்ள செய்முறை குறிப்பின் அடிப்படையில் நம் செல்கள் அவைகளை எளிதில் தயாரித்துக் கொள்ளும். ஆனால் இந்த DNA பாதிக்கப்பட்டால் இந்த தகவல்கள் மாற்றி அமைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இந்த தகவல் மாற்றத்தை திடீர் மாற்றம் (Mutation) என அழைக்கப்படுகிறது. “போய் படி” என்ற வாக்கியம் “போய் கடி” என்று மாற்றி எழுதுவது மாதிரி தவறுதலான கட்டளை DNAவில் பதிவாகிவிடும். செல்லில் அந்தக் கட்டளை அப்படியே நிறைவேற்றப்படும். அதாவது தவறான RNA, புரதம், மாவு மற்றும் கொழுப்புப் பொருட்கள் தயாரிக்கப்படும்!
இந்த மாற்றங்கள் ஆறுக்குமேல் ஒரு செல்லில் ஏற்பட்டால் அது புற்றுநோய் செல்லாக மாற்றமடையும்! மாற்றமடைந்த இந்த செல்கள் உடலில் இருக்கும் பெரும்பாலான சட்ட திட்டத்திற்குக் கீழ்ப்படியாது. தன்போக்கில் செயல்படும். இருக்கிற உணவை இதுவே அபகரித்துக் கொள்ளும். அதனால் அதிவேகமாக வளரும். இதனால் அருகில் உள்ள மற்ற செல்களையும் இயங்கவிடாது!
இந்த நிலையில் நம் உடலில் DNA உடைந்தால் இதனைக் கண்டறியப் பல புரதங்கள் (DNA damage Sensors) உள்ளன. இவை DNA உடைப்பு அல்லது ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் உடனே செல்பிரிதல் பயணத்தை நிறுத்தும் புரதக் கூட்டத்திற்கு தகவலனுப்பும். அவசர அவசரமாக இவைகள் செல்பிரிதல் பயணத்தை நிறுத்தும்.
DNA உடைந்தால் செல்பிரிதல் பயணத்தை நிறுத்தக்கூடிய புரதங்கள் பல. அவற்றில் p53, RB, BRCA1 போன்ற புரதங்கள் முக்கியமானவை. இந்த வரிசையில் Cep164 என்ற புரதமும் ஒன்று. இதனைக் கண்டறியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது . மேலும் இந்த துறையில் மட்டும் அமெரிக்காவில் ஏழு வருடகாலம் ஆராய்ச்சி செய்தேன்.
உடலுக்குள் நடக்கும் பழுதுப் பார்ப்பும் கொலைகளும்
நீண்ட முடிகளை கொண்ட பெண்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் அதனை வாரிய பின்னர் நன்கு பின்னி இரட்டைச் சடை போட்டுக் கொள்வார்கள். அதுமாதிரி செல்லில் இந்த நீண்ட DNA இழைகள் நன்கு சுற்றப்பட்ட நூற்கண்டு போல் இருக்கும். உடைந்த DNAவை சரி செய்ய நூற்கண்டில் சுற்றப்பட்ட நூல் பிரிக்கப்படுவது போல் DNA இழைகள் பிரிக்கப்படும். அடுத்து DNAவில் எந்தமாதிரியான சேதம் ஏற்பட்டுள்ளது என அறியப்படும். DNAவில் ஏற்பட்டுள்ள சேதத்தைச் சரி செய்யத் தேவையான கருவிகளும் இயந்திரங்களும் கொண்டுவரப்படும். அந்த கருவிகளும் இயந்திரங்களும் இரும்பால் ஆனது என நினைத்துவிடாதீர்கள். இவை அனைத்தும் DNA சேதத்தைச் சரி செய்யவல்ல புரதங்கள்தான்! இவைகளின் தயவால் முறையாக DNA பழுதுபார்க்கப்படும். பின்னர் இந்த DNAவின் தரம் சரிப்பார்க்கப்படும். அனைத்தும் சிறப்பாக நடந்து முடிந்தால் DNA இழைகள் மறுபடியும் நூற்கண்டுகளில் சுற்றப்பட்டது போல் சுற்றப்படும். பின்னர்தான் இந்த செல்கள் தங்கள் பயணத்தைத் தொடரும்! இதுமாதிரி நம் உடலில் ஒரு நாளைக்கு ஒரு செல்லில் மட்டும் 10 லட்சம் பழுதுபார்ப்பு பணிகள் நடக்கின்றன! அப்படியெனில் கோடானுக்கோடி செல்கள் உள்ள நம் உடலின் எத்தனை பழுதுப் பார்ப்பு பணிகள் நடக்குமென கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
ஒருவேளை உடைந்த DNAவை சரி செய்ய முடியவில்லை என்றால் அல்லது சரி செய்ய முடியாத அளவிற்கு உடைந்தால், DNA உடைப்பைக் கண்காணிக்கும் புரதக்கூட்டம் அந்த செல்லைக் கொல்ல வல்ல புரதக்கூட்டத்திற்கு ஆணையிடும். அந்தக் கொலைகார புரதக்கூட்டம் அந்த செல்லை ஈவு இரக்கமின்றி கொன்றுவிடும். இதனை ஆங்கிலத்தில் Apoptosis என அழைப்பார்கள்.
சாவு என்ற சொல்லை நாம் விரும்ப மாட்டோம் ஆனால் மேற்கண்ட வழிமுறைகளில் நம் உடலில் தினம்தினம் எண்ணற்ற செல்கள் சாவை சந்திக்கின்றன. இதனால்தான் நாம் புற்றுநோயிலிருந்து தப்பித்துக் கொள்ள முடிகிறது! அதாவது நம் உடலில் DNA உடைப்பு சரி செய்யப்படாமல் செல்பிரிதல் என்ற பயணம் தொடர்ந்தால் புற்றுநோய் உறுதி செய்யப்படுகிறது.
- கண்ணகியும் எகிப்தின் இசிஸ் தெய்வமும் ஒன்றா? பண்டைய எகிப்திய மன்னரின் மூதாதையர் திராவிடரா?
- இஞ்ஜினியரிங் படிக்காமலேயே சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் ஆவது எப்படி?
- ஜெராக்ஸ் கடை முதல் வசீகர குறுஞ்செய்திகள் வரை தொடரும் மோசடிகள் – தப்பிப்பது எப்படி?
ஆக… நம் உடலுக்குள் நடக்கும் சாவும் எவ்வளவு நல்ல செய்தி என்று எண்ணிப் பாருங்கள்!
ஒரு கவிஞன் “எல்லோருக்கும் நல்லவன் தன்னையிழந்தான்” எனப் பாடி கேட்டிருக்கிறேன். இதனை நாம் கடைபிடிக்கின்றோமோ இல்லையோ? நம் செல்கள் மிக உறுதியாகக் கடைபிடிக்கின்றன. மேலும் இது எனக்கு,
“தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்”
என்ற திருக்குறளையும் நினைவுப்படுத்துகிறது.
மனிதர்களுக்குப் புற்றுநோய் என்பது அரிதான நோயாகும். சுமார் ஐந்நூறு பேர்களில் ஒருவருக்குப் புற்றுநோய் வருவதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. DNAவை பாதுகாக்கும் மேற்கண்ட முக்கிய புரதங்களில் ஒன்று வேலை பார்க்கவில்லை என்றால் நமக்கு 30 வயதுக்குள் புற்றுநோய் வந்துவிடும். வயதான பின் வரும் புற்றுநோய்கள் நம் வாழ்ந்தமுறை, உண்ட உணவு, குடித்த தண்ணீரில், சுவாசித்த காற்றிலிருந்த வேதிப்பொருட்களின் விளைவின் கூட்டுத் தொகையே எனக் கொள்ளலாம்.
இந்த வகைச் செல்நிறுத்தத்தை ஆங்கிலத்தில் Cell cycle checkpoint என அழைக்கப்படுகிறது. இதன் முக்கிய பங்கு நம்மைப் புற்றுநோயிலிருந்து காப்பது மட்டுமில்லை, குறைபாடுள்ள குழந்தைகளின் பிறப்பைக் கட்டுப்படுத்துவதும் இந்த செல் நிறுத்தங்களே இன்றி வேறில்லை!
குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்க காரணம்
எனக்குப் பொன்னிறத்தில் மொறுமொறு என மெல்லிய பத்து தோசை வேண்டும். அதுவும் கிழியாமல் அழகாக வேண்டும். ஒரே முயற்சியில் ஒன்றுக்கூட கிழியாமல் உங்களால் பத்து தோசை சுட முடியுமா? உணவகத்தில் பல ஆண்டுகள் வேலை பார்க்கும் திறமையான சமையல் கலைஞர்களுக்கு வேண்டுமானால் சாத்தியப்படலாம்.
தமிழ்நாட்டில் 2017ல் குறைபாடுள்ள குழந்தைப் பிறப்பு கணக்கெடுக்கப்பட்டது. அதில் இருநூறு குழந்தைகளில் சுமார் மூன்று குறைபாடுள்ளவை எனக் கண்டறியப்பட்டது (4). நம் உடலில் 78 உறுப்புகளும் 206 எலும்புகளும் உள்ளன. இவை அனைத்தும் சரியாக உருவாக்கப்பட்டால்தான் அந்த குழந்தை ஆராக்கியமான குழந்தையாகக் கருதப்படும். தோசையின் வடிவமைப்பு அப்படி அல்ல. மிகவும் எளிதானது. கிழியாமல் 10 தோசையை வார்த்து எடுப்பது நமக்குக் கடினமாக உள்ளது. இந்த நிலையில் 200 மகப்பேற்றில் மூன்று மட்டுமே குறைபாடுள்ள குழந்தை என்ற இமாலயச் சாதனைக்கு செல்நிறுத்தக் கட்டுப்பாடுகள்தான் முக்கிய காரணமாகும்!
இது எப்படி நடக்கிறது என்றால் உடைந்த மற்றும் இயற்கைக்கு மாறான மரபணுக்கள் நிறைந்த கருவின் வளர்ச்சியைச் செல்பிரிதலை செல்நிறுத்தக் கட்டுப்பாடுகள் நிறுத்துகின்றன. பின் இவை கருச்சிதைவைத் தூண்டுகிறது. இந்த மாதிரியான கருச்சிதைவு முதல் மூன்று மாதகாலத்தில்தான் அதிகமாக நடக்கிறது. அதனால்தான் குறைபாடுகளுள்ள குழந்தை பிறப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த செல்நிறுத்தக் கட்டுப்பாடுகள் பல வகையானது. இதுவரை DNA உடைவதால் ஏற்படும் 5 முக்கிய செல்சுழற்சி நிறுத்தங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவைகளை G0, G1, S phase, G2/M மற்றும் spindle செல் நிறுத்தங்கள் என அழைக்கப்படுகிறது.
மேலும் கருவறையில் வளரும் கருவின் செல்கள் அதிவேகத்தில் பல்கிப் பெருக காரணம், மேல் கூறிய இந்த செல்நிறுத்தங்கள் கருவில் முதல் ஓரிரு மாதங்களுக்கு சரியாக வேலை பார்ப்பதில்லை என நம்பப்படுகிறது. எந்த கட்டுப்பாடு தடைகளும் இல்லாமல் வளரும் கருவில் செல்கள் தானாக வளர்ந்து பல்கிப் பெருகும். பின்னர் இந்த கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக அங்குள்ள செல்களில் அறிமுகப்படுத்தப்படும். அப்போது மரபணுவான DNAவின் தரம் சோதிக்கப்படும். கருவின் செல்களில் உள்ள DNA துண்டுகள் ஒன்றிரண்டு இல்லாமல் இருப்பது அல்லது கூடுதல் எண்ணிக்கையில் இருப்பது மற்றும் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டிருப்பது ஆகியவை கண்டறியப்பட்டால் இந்த புரதங்கள் கருச்சிதைவைத் தூண்டும். முன்னரே குறிப்பிடப்பட்டதை போன்று, இவ்வகை கருச்சிதைவுதான் முதல் மூன்று மாதங்களில் அதிகம் நடைபெறுகிறது.
இத்தகைய சேதமடைந்த DNAக்களைக் கொண்ட கரு மேற்கொண்டு வளர்ந்தால் அது கடுமையான குறைபாடுள்ள குழந்தையாகவே இருக்கும். பிறக்கும் குழந்தைகளில் 50 சதவிகிதம் குறைபாடுள்ளவை எனில் ஒரு பத்து தலைமுறையில் மனித இனம் முற்றிலும் காணாமல் போய்விடும்!
மாறாக கருவில் இந்த கட்டுப்பாடுகளில்லாமல் முழு சுதந்திரத்துடன் பல்கிப் பெருகிய செல்களில் மரபணு 100% தரத்துடன் இருந்தால், பல கட்டுப்பாடுகளின் மத்தியில் பல வகையான DNA பாதிப்பைச் சரி செய்ய வல்ல புரதக் கூட்டங்களின் உதவியுடன் இந்த செல்கள் முழு குழந்தையைத் தவறில்லாமல் உருவாக்க முடியும்! மேலும் பிறந்த குழந்தை எல்லா நச்சு வேதிப்பொருட்களையும் சமாளித்து இவ்வுலகில் வாழவும் முடியும்!
நாம் நம் கடமைகளையும் நாட்டின் சட்டதிட்டங்களையும் சரியாகக் கடைப்பிடிக்கிறோமோ இல்லையோ? நம் உடலிலுள்ள கோடானுக்கோடி செல்கள் தங்கள் சட்டத்திட்டங்களை மதித்து சற்றும் தளர்வில்லாமல் நடப்பதால்தான் நாம் நோயின்றி நிம்மதியாக வாழ முடிகிறது. மனிதகுலத்தில் மட்டும் அல்ல, அனைத்து உயிரினங்களிலும் DNAவை பாதுகாக்கும் இந்த சட்டதிட்டங்கள்தான் உள்ளன. இதனாலேயே பூமில் எண்ணற்ற உயிரினங்கள் தழைத்தோங்குகிறது! இதனால் DNA என்ற ஆன்மா சுமார் 320 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் ஆட்சி செய்து வருகிறது.
(மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சி பயணத்தைத் தொடங்கிய கட்டுரையாளர் சுதாகர் சிவசுப்பிரமணியம், 1999இல் முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பத்து வருடங்கள் பணியாற்றியுள்ளார். தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் இவர், பல்கலைக்கழக தொல்லியல் மையத்தின் இயக்குநராவும் செயல்படுகிறார். மண்புழுவைக் கொண்டு உறுப்புக்களின் மறுஉருவாக்கம் மற்றும் வயதாவது சம்பந்தப்பட்ட நோய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்துவருகிறார். இவர் மண்புழுக்களின் மரபணுத் தொகுப்பைக் கண்டறிந்தவர்.)
தயாரிப்பு: சாய்ராம் ஜெயராமன், பிபிசி தமிழ்
https://www.youtube.com/watch?v=N3CjtKO7TSM
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்