ராணுவம், விமானப்படை, கடற்படை வீரர்கள் நாட்டுக்கு மரியாதை: பூமியில் இருந்து 30 கி.மீ உயரத்தில் பறந்த தேசிய கொடி…

டெல்லி: பூமியில் இருந்து 30 கி.மீ உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விண்வெளியில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டது. இளம் விஞானிகளை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்திய அமைப்பு நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் விண்வெளியில் தேசிய கொடியை பறக்கவிட்டது. பூமியிலிருந்து 1,06,000 அடி உயரத்தில் பலூன் ஒன்றின் உதவியோடு கொண்டு செல்லப்பட்ட தேசிய கொடி பின்னர் பறக்கவிடப்பட்டது. இந்திய சுதந்திர தினத்திற்கு சர்வதேச விண்வெளி மையத்தில் பணியாற்றும் விண்வெளி வீரர் அமெரிக்க வாழ் இந்தியரான ராஜா சாரி உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது பற்றி கருத்து தெரிவித்த ராஜா சாரி நாசா மற்றும் இஸ்ரோ அமைப்பு நீண்ட கால ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாக கூறினார். விண்வெளியில் இருந்து தான் பிறந்த ஊரான ஹைட்ரபாத்தை கண்டு பிரமிப்பு கொள்வதாக அவர் தெரிவித்தார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சுரோவ் சிங், பவன் பாண்டி ஆகியோர் 2 டுரோன்களில் தேசிய கொடியை கட்டி வானில் அனுப்பி பறக்க விட்டனர். இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த டுரோனில் 3மீ அகலம், 2மீ நீளம் கொண்ட தேசிய கொடியை அவர்கள் வானிலையே அரைமணி நேரம் பறக்க விட்டனர். நமது நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் ராணுவம், விமானப்படை, கடற்படை தளங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஐரோப்பா சென்ற இந்திய கடற்படை கப்பல் தரங்கணியில் வீரர்கள் மூவர்ண கொடியேற்றி மரியாதை செலுத்தினர். உத்தராகண்ட், லடாக் உள்ளிட்ட எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினர். காஷ்மீரின் இமயமலை தொடரில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான போர்முனையான சியாச்சினிலும் ராணுவ வீரர்கள் மூவர்ண கொடியை ஏற்றி தேசிய கீதத்தை இசைத்தனர். டெல்லி செங்கோட்டையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பீரங்கிகள் அணிவகுத்து நிற்கப்பட்டு 21 முறை குண்டுகள் முழங்க நாட்டுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த பீரங்கிகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் தயாரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.