ஓபிஎஸ்.,க்கு தூது விட்ட டிடிவி தினகரன் – எடப்பாடி பழனிசாமிக்கு 'நோ'

அதிமுகவின் தற்போதைய நிலை வருத்தமாக உள்ளது எனவும், பதவி வெறி, சுயநலம் கொண்டவர்களிடம் அதிமுக உள்ளது எனவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.

சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் துணைத் தலைவர் அன்பழகன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்த ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தல்; பேரறிவாளனை போல மீதமுள்ள 6 தமிழர்களையும் விடுவிக்க வேண்டும் என்பது உட்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பொதுக்குழு கூட்டத்தில், அமமுகவுக்கு தலைவரை தேர்ந்தெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமமுகவில் சசிகலாவுக்காக தலைவர் பதவி காலியாக வைத்திருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுக்குழு கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது:

தேர்தல் வெற்றி – தோல்வி என்னை பாதித்தது இல்லை. வருங்காலத்தில் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை அமமுக அமைக்கும். அதிமுகவின் தற்போதைய நிலை வருத்தமாக உள்ளது. பதவி வெறி, சுயநலம் கொண்டவர்களிடம் அதிமுக உள்ளது.

அதிமுக ஓர் அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது. சொந்த கட்சியிலேயே பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை காசு கொடுத்து வாங்கும் கேவலமான நிலையில் அதிமுக உள்ளது .எடப்பாடி பழனிசாமிக்கு 90 சதவீத ஆதரவு உள்ளது என்றால் வாக்குப் பெட்டியை வைத்து தேர்தல் நடத்த வேண்டியது தானே…

அதிமுகவில் வகித்த பதவிகளை தூக்கி எறிந்து விட்டு என்னுடன் 5 ஆண்டுகளாக பயணித்துக் கொண்டிருப்பவர்கள் நீங்கள். எதையும் எதிர்பார்க்காத தன்னலமற்ற படை நம்மிடம் உள்ளது. அங்கே இருப்பது கூலியை எதிர்பார்த்து வேலை செய்யும் கூட்டம். தன் பதவியை பறித்து விட்டார்கள் என்ற கோவத்தில் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். பிற்காலத்தில் தன் தவறை உணர்ந்து மாறி விட்டார். ஆனால் பழனிசாமி மேலும் மேலும் தவறு செய்தார். துரோகம் செய்து கொண்டே இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க, சசிகலா – டிடிவி தினகரனுடன், ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக டிடிவி தினகரன் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கும் முடிவுக்கு ஓ.பன்னீர்செல்வத்திற்கு டிடிவி தினகரன் ஓகே மறைமுகமாக ஓகே சொல்லி இருப்பதாக தெரிவிக்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.