நாடு 76வது சுதந்திர தினத்தை உற்சாகமாகக் கொண்டாடும் வேளையில் பிரதமர் நரேந்திர டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார்.
முன்னதாக பிரதமர் மோடி, மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டை வருகை தந்த அவரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.
பின்னர் முப்படைகளின் மரியாதையை ஏற்று விழா மேடைக்குச் சென்றார். சரியாக 7.30 மணிக்கு பிரதமர் தேசியக் கொடியை ஏற்றினார். பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றுவது இது 9வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்தவுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் 4 ஹெலிகாப்டர்கள் மூலம் தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
அதன் பின்னர் சாரே ஜஹான் சே அச்சா பாடல் முழங்க வீரர்கள் பரேட் நடத்தினர். அதன் பின்னர் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார்.
தனது உரையில் விடுதலை வீரர்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி தமிழகத்தின் வேலு நாச்சியார், பாரதியார் பெயர்களையும் குறிப்பிட்டுப் பேசினார்.
வெள்ளை நிற தலைப்பாகை: பிரதமர் மோடி வெள்ளை நிற தலைப்பாகை அணிந்திருந்தார். அதில் காவி நிறம் மற்றும் பச்சை நிறக் கோடுகள் இருந்தன. பார்ப்பதற்கு தேசியக் கொடி உணர்வைத் தரும் வகையில் அந்த தலைப்பாகை அமைந்துள்ளது. வெளிர் நீல கோட் அணிந்திருந்தார்.
சுதந்திர தின விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், அதிகாரிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டுள்ளனர். சுதந்திர தின விழாவை ஒட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.