புதுடில்லி : சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, 19 ஆண்டுகளாக சிறையில் இருப்பவரை தற்காலிக ஜாமின் வழங்கி விடுவிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில், 2003ல் நடந்த சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்த தண்டனையை, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை உறுதி செய்தன. அவருடைய கருணை மனுவை ஏற்று, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து ஜனாதிபதி உத்தரவிட்டார்.இந்நிலையில், சம்பவம் நடந்தபோது தான், ‘மைனர்’ என்றும், ஏற்கனவே 19 ஆண்டுகளாக சிறையில் உள்ளதால் விடுதலை செய்யக் கோரி, அந்த நபர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வி.ராமசுப்ரமணியன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை நடந்தபோதும், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிய போதும், இந்த நபர், சம்பவம் நடந்தபோது தான் மைனர் என்பதை குறிப்பிடவில்லை.கடந்த 2014ல் உத்தர பிரதேசம் ஆக்ராவில் உள்ள சிறார் நீதிமன்றம், சம்பவம் நடந்தபோது, இந்த நபர் சிறுவன் தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. சிறார் நீதிமன்ற சட்டங்களின்படி, மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒருவரை சிறையில் அடைக்க முடியாது.அதனால், உடனடியாக இவருக்கு தற்காலிக ஜாமின் வழங்கி விடுவிக்க வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement