ஃபெட் கோல்டு லோன்ஸ் வங்கி கொள்ளை வழக்கில் முக்கிய கொள்ளையன் கைது.!

சென்னையில் ஃபெட் கோல்டு லோன்ஸ் வங்கியில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முக்கிய கொள்ளையன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளை கும்பல் சிக்கியது எப்படி என காவல் ஆணையர் விளக்கமளித்துள்ளார். 

சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டனில் செயல்பட்டு வரும் ஃபெடரல் வங்கியின் நகை கடன் பிரிவான ஃபெட் பேங்கில் நேற்று முன்தினம் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. ஊழியர்களுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கட்டிப்போட்டு பட்டப்பகலிலேயே கொள்ளை சம்பவம் நிகழ்த்தப்பட்டது.

காவல்துறையினரின் விசாரணையில் வங்கியின் ஊழியரே கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் கொள்ளையர்களில் பாலாஜி என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் சந்தோஷ், சக்திவேல் என 2 பேரை கைது செய்த போலீசார், பதுக்கி வைத்திருந்த 18 கிலோ தங்கத்தை மீட்டனர். மேலும், இன்று முக்கிய கொள்ளையனான முருகன் திருமங்கலத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மீட்கப்பட்ட நகைகள் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உட்பட அதிகாரிகள் அவற்றை பார்வையிட்டனர்.

பின்னர், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்தார். மொத்தம் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்கள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள கொள்ளையர்களும் ஓரிரு நாளில் பிடிபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இரண்டரை ஆண்டுகளாக முருகன் அந்த வங்கியில் பணிபுரிந்த நிலையில்,நகைகள் இருக்கும் இடம், பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு ஆகியவை தெரிந்ததால் தனது பள்ளியில் இருந்தே ஒன்றாக பயின்ற நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொள்ளையை திட்டமிட்டுள்ளனதாக காவல் ஆணையர் குறிப்பிட்டார்.

கொள்ளை கும்பல் சென்னையை விட்டு வெளியில் சென்றுவிட்டு மீண்டும் சென்னைக்குள் வந்து பல்வேறு இடங்களில் சுற்றி செல்போன்களை மாற்றி மாற்றி குழப்பத்தை உருவாக்கியதாகவும் காவல் ஆணையர் விளக்கமளித்தார்.

அதேபோல், வங்கியில் இருந்து தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பும் வரை வங்கியின் தலைமையகத்திற்கு அலாரம் எச்சரிக்கை செய்யவில்லை என்றார்.

சர்வர் மூலம் வங்கி தலைமையத்தின் அனுமதி பெற்ற பிறகே லாக்கரை திறக்கும் வகையில் தான் பாதுகாப்பு கட்டமைப்பு இருக்கும் ஆனால், அவ்வாறு அலாரம் எச்சரிக்கை செய்யவில்லை என்றும் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

முன்னதாக, முக்கிய கொள்ளையன் முருகன், சம்பவத்திற்கு முதல்நாள் வலிமை பட வசனம் ஒன்றை வாட்ஸ் அப் ஸ்டேடஸ் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.