வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை :தன்னைப் பற்றி அவதுாறாக பேசியதாக, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் முன்னாள் இயக்குனர் சமீர் வான்கடே, மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார்.
மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குனராக பணியாற்றியவர் சமீர் வான்கடே. இவர் மீது, மஹாராஷ்டிரா அமைச்சராக இருந்த, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவாப் மாலிக், சில மாதங்களுக்கு முன் பரபரப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். சமீர் வான்கடே, போலியான ஜாதிச் சன்றிதழ் அளித்து அரசு பணியில் சேர்ந்ததாக நவாப் மாலிக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக, மும்பையில் உள்ள சான்றிதழ் சரிபார்ப்புக் குழு விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையில், சமீர் வான்கடே பொய்யான சான்றிதழ் எதுவும் அளிக்கவில்லை என தெரியவந்தது. இது குறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது.
இதையடுத்து, தன்னைப் பற்றி அவதுாறாக பேசிய நவாப் மாலிக் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில், சமீர் வான்கடே தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
போலீசார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் சரியாக செயல்படவில்லை என்பதால், சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டவர்,சமீர் வான்கடே.மஹாரஷ்டிரா முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement