மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஜூன் 30-ம் தேதி சிவசேனா அதிருப்தி அணியும் பாஜகவும் இணைந்து புதிய அரசை அமைத்தன. சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், 41 நாட்களுக்குப் பிறகு மகாராஷ்டிர அமைச்சரவை கடந்த செவ்வாய்க்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 18 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.இந்தசூழ்நிலையில், அதி முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை மற்றும்நிதி இலாகாவை துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு ஏக்நாத் ஷிண்டே நேற்று ஒதுக்கீடு செய்தார். இதன் மூலம்இலாகா ஒதுக்கீட்டில் துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில், ஊரக மேம்பாட்டுத் துறை இலாகாவை ஏக்நாத் ஷிண்டே தம்மிடமே வைத்துக்கொண்டார். இந்த நிலையில், மகாராஷ்டிர முதல்வர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு உள்துறை, நிதி அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, திட்டமிடல் துறையையும் அவர் கூடுதலாக கவனிப்பார். பாஜக அமைச்சர் ராதாகிருஷ்ணா விகே பாட்டீலுக்கு வருவாய் துறையும், சுதிர் முங்கந்திவாருக்கு முந்தைய வனத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநில பாஜக முன்னாள் தலைவர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு புதிதாக உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதனுடன் சேர்த்து பேரவை விவகாரத் துறையையும் அவர் கூடுதலாக கவனிப்பார்.
சிவசேனாவிலிருந்து அதிருப்தியில் வெளியேறி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவிய தீபக் கேசர்காருக்கு அமைச்சரவையில் பள்ளி கல்வித் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அப்துல் சத்தாருக்கு வேளாண் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.