76வது சுதந்திர தின விழாவை ஒட்டி, தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில், முதலமைச்சர் பங்கேற்றார்.
நாட்டின் 76வது சுதந்திர தினமான இன்று, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினார். சுதந்திர தினத்தன்று, முதலமைச்சர், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு, மாநில ஆளுநர் மாலையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
அதன்படி, சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார். இந்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும், சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெரம்பலூர் எம்.பி.பாரிவேந்தன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். திமுகவின் தோழமை கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் கலந்து கொண்டார். அதே சமயம், இந்த விருந்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.