இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று (ஆகஸ்ட் 15) மாலை 05.00 மணிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு அளித்த தேநீர் விருந்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின், ஓ. பன்னீர் செல்வம், ஜி.கே. வாசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) இந்தியாவின் 76வது சுதந்திர தின அமுதுப் பெருவிழா கோலாலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி உரையாற்றினார். தமிழ்நாட்டில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார்.
தமிழகத்தில் மரபுப்படி சுதந்திர தினம் அன்று ராஜ்பவனில் ஆளுநர் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அரசியல் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அதன்படி, 76வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று (ஆகஸ்ட் 15) மாலை 05.00 மணிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு அளித்த தேநீர் விருந்து அளித்தார்.
இந்த தேநீர் விருந்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள், தமிழக அரசின் உயரதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில், திமுகவின் தோழமைக் கட்சிகளான ங்கிரஸ், விசிக கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநர் அளித்துள்ள இந்த தேநீர் விருந்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். ஓபிஎஸ் ஆதரவாளர்களாகக் கருதப்படும் வைத்தியநாதன், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் இந்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டனர்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. அதிமுகவில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே மோதல் நடந்துவரும் நிலையில், ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்துகொண்டுள்ளார். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்காதது கவனத்தைப் பெற்றுள்ளது.
ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது, ஸ்டாலினும் ஓ.பி.எஸ்-ஸும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். ஜி.கே. வாசன் உடன் இருந்த ஓ.பி.எஸ்-ஐ பார்த்த மு.க. ஸ்டாலின் இருவருக்கும் வணக்கம் தெரிவித்து சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”