சென்னை: தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 494 பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்படித்து வருகின்றனர். இதற்கிடையே வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அறிவித்தது. இதற்காக 90 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டு வளரும் தொழில்நுட்பங்கள், தொழில் நிறுவனங்களின் தேவை, ஆராய்ச்சியை ஊக்குவித்தல், தொழில்முனைவோராக உருவாக்குதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு எதிர்கால சூழலுக்கேற்ப தற்போது புதிய பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.
இந்த பாடத்திட்டத்தை அமல்படுத்த அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி அனுமதி வழங்கியது. இதையடுத்து சுமார் 20ஆண்டுகளுக்கு பின் பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது பெரும்எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பொறியியல் படிப்பை படித்து முடித்து வெளியேறும் பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகள்வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.
தற்போதைய சூழலில் தொழில் நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கான திறன்களை அவர்கள் பெற்றிருக்காததுதான் அதற்கு முக்கியக் காரணமாகும்.
புதிய பாடத் திட்டத்தை பொறுத்தமட்டில் 5-ம் பருவத்தில் (செமஸ்டர்) இருந்துதான் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல் 4 பருவங்களில் வழக்கம்போல் அடிப்படை பாடங்கள் மட்டும் கூடுதல் அம்சங்களுடன் கற்பிக்கப்பட உள்ளன.
8-வது பருவத்தில் மாணவர்கள் தொழிற்சாலையில் 6 மாதகாலம் பயிற்சி பெறும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் ஊர்களில்உள்ள தொழில் நிறுவனங்களில்கூட பயிற்சியை மேற்கொள்ளலாம்.
அதேநேரம் ஏற்கெனவே முந்தைய பாடத்திட்டத்தில் படிக்கும் 3, 4-ம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம் இருக்காது. திறன்களை வளர்க்கும் வகையில் சில பாடங்கள் மட்டும்கூடுதலாக இணைக்கப் பட்டுள்ளன.
மேலும், சராசரி மாணவர்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் விதமாக பாடத்திட்டம் இருக்கும். அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு தயார் நிலையில் உள்ளோம். ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.