உலக வரலாற்றிலேயே முதல் நாடாக ஸ்காட்லாந்தில் பெண்களுக்கான மாதாந்திர சகாதார பொருட்களை இலவசமாக வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டமானது திங்கட்கிழமை (ஆகஸ்ட் 15) முதல் நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டது.
ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியான ஸ்காட்லாந்தில் பெண்களுக்கான மாதவிடாய் தொடர்பான சுகாதார தயாரிப்புகளை முற்றிலுமாக இலவசமாக வழங்கப்படுவதற்கான சட்டம் இன்றுமுதல் அமுலுக்கு வந்தது.
இந்த புதிய சட்டத்தின் (Period Products Act) மூலம் இலவச சுகாதாரப் பொருட்களின் உரிமையைப் பாதுகாக்கும் உலகின் முதல் நாடு என்ற வரலாற்று பெருமையை ஸ்காட்லாந்து பெறுகிறது.
2020-ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட இந்த Period Products Act சட்டம், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
டம்போன்கள் மற்றும் சானிட்டரி பேட்கள் போன்ற சுகாதாரப் பொருட்களைப் பொதுவில் அணுகுவதற்கு ஸ்காட்லாந்து அரசாங்கத்தின் முயற்சிகளை இந்தச் சட்டம் உறுதிப்படுத்துகிறது.
இப்போது கவுன்சில்கள் மற்றும் கல்வி வழங்குநர்கள் (பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்) சட்டப்பூர்வமாக தேவைப்படும் எவருக்கும் மாதவிடாய் தயாரிப்புகளை இலவசமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று ஸ்காட்லாந்து அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இலவச மாதவிடாய் தயாரிப்புகளுக்கான அணுகலை வழங்குவது சமத்துவத்திற்கும் கண்ணியத்திற்கும் அடிப்படையாகும், மேலும் அவற்றை அணுகுவதற்கான நிதி தடைகளை நீக்குகிறது” என்று ஸ்காட்லாந்தின் சமூக நீதித்துறை செயலாளர் ஷோனா ராபிசன் கூறினார்.
இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளும் உலகின் முதலாவது தேசிய அரசாங்கம் என்பதில் நாம் பெருமையடைகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
நவம்பர் 2020-ல், ஸ்காட்டிஷ் நாடாளுமன்றம் ஒருமனதாக மாதவிடாய் தயாரிப்புகள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது. பொதுக் கட்டிடங்களில் சுகாதாரப் பொருட்களை இலவசமாகப் பெறுவது சட்டப்பூர்வ உரிமை என்று சட்டம் உருவாக்கியது.