தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரபட்டனத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டுவருகிறது. இந்த ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துதல் பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு, குலசேகர பட்டினத்தை சுற்றியுள்ள கிராமங்களான அமரா புரம், கூடல் நகர், அழகப்புரம், மாதவன் குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
தொடர்ந்து, நில அளவீடு செய்யும் பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது வேலிகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தடுப்பு வேலிகள் அமைக்கும் இன்னும் 4 மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குலசேகரப்பட்டனத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. தொடர்ந்து நிலம் கையகப்படுத்த மாநில அரசு உத்தரவிட்டது. இந்தத் திட்டத்தை குலசேகரப்பட்டனத்தில் கொண்டுவர அப்பகுதி எம்.பி. கனிமொழியும் முயற்சிகள் மேற்கொண்டார். இஸ்ரோ தலைவராக கே. சிவன் பொறுப்பில் இருந்தபோது இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது நிலம் கையகப்படுத்தல் பணிகள் நிறைவடைந்துள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் தற்போதுவரை 2,350 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் விரைந்து நடைபெற்றுவருகின்றன.
இது தொடர்பாக மார்ச் மாதம் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “குலசேகரத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. இந்தத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil