ஐதராபாத்: புஷ்பா 2 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என அவரது தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடித்த புஷ்பா படம், இந்த ஆண்டு வெளியானது. பான் இந்தியா படமாக பல மொழிகளிலும் வௌியாகி, ஹிட்டானது. இந்த படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருந்தார் சமந்தா. இந்த பாடல் காட்சி வைரலானது. படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களுமே ஹிட்டாகின. இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. முதல் பாகத்தில் விஜய் சேதுபதியிடம் முக்கிய வேடத்தில் நடிக்க பேசப்பட்டது. ஆனால் அவர் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வேடத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் நடித்தார். கதைப்படி கொடூரமான போலீஸ் அதிகாரி வேடம் அது. இந்நிலையில் இப்போது புஷ்பா 2வில் வேறொரு கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசப்பட்டது. அது வில்லன் வேடம் என சொல்லப்படுகிறது. இதில் அவருக்கு மனைவியாக பிரியாமணி நடிப்பார் என்றும் அவரும் வில்லி வேடத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசப்பட்டது. இதில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என இயக்குனர் அட்லீ கேட்டுக்கொண்டார். இதையடுத்து கால்ஷீட் பிரச்னையால், ஜவான் படம் அல்லது புஷ்பா 2 என இரண்டில் ஏதாவது ஒரு படத்தில் மட்டுமே நடிக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் விஜய் சேதுபதி இருந்தார். இதையடுத்து ஷாருக்கானே விஜய் சேதுபதியிடம் பேசி, ஜவானில் நடிக்க கேட்டார். இதனால் தனது கால்ஷீட்டை ஜவான் படத்துக்கு விஜய் சேதுபதி கொடுத்துவிட்டார். இதனால் புஷ்பா 2வில் அவர் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.