சைவ உணவகத்தில் வாங்கிய பூரியில் புழு இருந்ததாக புகார் – அதிகாரிகள் சோதனை

சென்னையில் பிரபல மால் ஒன்றில் செயல்படும் தனியார் சைவ உணவகத்தில் வாடிக்கையாளர் வாங்கிய சோலா பூரியில் புழுக்கள் இருந்ததாக புகார் எழுந்ததையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவர் நேற்று மாலை தனது மகனுடன் சென்னை திருமங்கலத்தில் உள்ள பிரபல மாலில் மூன்றாவது தளத்தில் செயல்பட்டு வரும் தனியார் சைவ உணவகத்தில் (நம்ம வீட்டு வசந்தா பவன்) தனது மகன் கேட்டதையடுத்து சோலா பூரி ஒன்று ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.
image
அப்போது அதை சாப்பிட முற்பட்டபோது அதில் புழு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர்,  உணவு செய்யும் கூடத்தை தான் பார்க்க வேண்டும் என உணவக நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். இதையடுத்து உணவு கூடத்தின் உள்ளே சென்று பார்த்தபோது சோலா பூரி தயாரிக்க வைத்திருந்த மாவில் ஐந்திற்கும் மேற்பட்ட புழுக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனதாக கூறுகிறார்.
image
இதுகுறித்து உணவக நிர்வாகத்திடம் கேட்டபோது உரிய பதில் கிடைக்காததை அடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சுந்தரமூர்த்தி தலைமையிலான குழுவினர், மாவில் புழுக்கள் இருப்பதைக் கண்டு சமையல் கூடத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்தனர். இதையடுத்து அங்கு வைத்திருந்த மற்ற உணவுகளின் மாதிரிகளையும் சேகரித்து ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் உணவக நிர்வாகிகளை எச்சரித்து அபராதமும் விதித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.