மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், ‘‘அகலக்கால் வைக்காதே என்பார்கள். ஆனால், அதைப் பலரும் மதிப்பதே இல்லை. நீங்களும் அவர்களில் ஒருவர் என்றால், அதனால் வந்த எதிர் விளைவுகள்?” – ‘நச்’ சென்று சில வரிகளில் பகிருங்கள். சரியான விடையுடன்
`நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.
சுதந்திர இந்தியா 75 போட்டி
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளானதைச் சிறப்பிக்கும் வகையில் இங்கு விடுதலைக்கு முன்பு, விடுதலைக்குப் பின்பு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த பெண்கள் சிலரை நினைவுகூரும் விதமாக இந்தப் போட்டி. கீழே கேள்விகளும் அவற்றுக்கான விடைகளில் சில எழுத்துகள் விடுபட்டும் இருக்கின்றன. சரியான பெயரை எழுத வேண்டும் என்பதுதான் போட்டி.
1. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தடையை மீறி இந்தியக் கொடியை ஏற்றியவர்.
2. இந்தியாவின் முதல் பெண் ஆளுநர். கவிக்குயில் என்றும் அழைக்கப்படுபவர்.
3. ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பெண் தலைவர்.
4. நேதாஜி படையின் பெண்கள் பிரிவின் தலைவர். மருத்துவர்.
5. இந்தியாவின் மூன்றாவது பிரதமர். முதல் பெண் பிரதமர்.
6. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர்.
7. காந்தியால் `தென்னிந்தியாவின் ஜான்சி ராணி’ என்று அழைக்கப்பட்டவர். மூன்று முறை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
8. சுதந்திரப் போராட்ட வீரர். பண்ணை அடிமை முறையை எதிர்த்தவர். பொதுவுடைமை இயக்கத்தில் செல்வாக்குமிகுந்த இவர், மான் முட்டி இறந்தார்.
9. சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர். தேவதாசி ஒழிப்பு, இருதார மணத் தடை, குழந்தைத் திருமணத் தடை, பெண்களுக்குச் சொத்துரிமை போன்ற சட்டங்கள் கொண்டுவரக் காரணமாக இருந்தவர். மருத்துவர்.
10. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண்.
11. சேவைக்குப் புகழ்பெற்ற புனிதர்.
12. எவரெஸ்ட்டில் ஏறிய முதல் இந்தியப் பெண்.
13. புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியப் பெண்.
14. பளு தூக்குதலில் முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்.
15. பாரத ரத்னா வென்ற இசையரசி.
சரியான விடையுடன்… `மூடநம்பிக்கை’ – உங்கள் அல்லது அக்கம்பக்கத்தாரின் அனுபவம்… – `நச்’ வரிகள் எழுதி ரூ.500 பரிசு பெறும் 10 பேர்…
1. அமலா அல்போன்ஸ், வள்ளியூர், நெல்லை: அரசமரத்தில் பேய்கள் குடியிருக்கும் என்று பலரும் என்னை பயமுறுத்தி னார்கள். அவர்கள் சொன்ன அந்த மூடநம்பிக்கை பற்றி நான் கவலைப்படவோ, பயப்படவோ இல்லை. எங்கள் வீட்டின் பின்புறம் சாலையோரமாக அகன்று விரிந்த பெரிய அரசமரம் இருக்கிறது. ஆனால், இதுவரை அந்த மரத்தில் பேயோ, பிசாசோ இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பலருக்கும் இளைப்பாற நிழல்தான் தந்துகொண்டிருக்கிறது.
2. ஆனந்தி பாலசுப்பிரமணியன், பெங்களூரு-2: நான் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். எனக்கு ஜோசியம், ஜாதகம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. திருமணம் முடிந்த பிறகும் ஜாதகம் பார்க்கவில்லை. சிறு சிறு பூசல்கள் இருந்தாலும், இருவரும் மனம் ஒத்து வாழ்கிறோம். ஜாதகம் என்பது ஒரு குறிப்புதானே தவிர, உள்ளபடியே எல்லாம் நடக் கும் என்பது மூடநம்பிக்கை என்பது என்னுடைய அனுபவம்.
3. இரா.ராமலட்சுமி, நெல்லை-6: அஷ்டமி, நவமி பார்ப்பது மூடநம்பிக்கை. என் தம்பிக்கு கல்லூரியில் உடனே சேரும்படி அழைப்பு வந்தது. என் அப்பா, `இன்று அஷ்டமி, நாளை நவமி… எனவே முடிந்ததும் சேரலாம்’ என்றார். மறுநாள் சென்றவுடன் அட்மிஷன் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நல்ல கல்லூரி யில் அனுமதி கிடைத்தும் அஷ்டமி, நவமியால் சேர முடியாமல் வேறு கல்லூரியில் சேர்ந்தான்.
4. சந்திரா இராஜசேகரன், திருச்செந்தூர்: தெரிந்தோ, தெரியா மலோ பிறர் நம் மீது வீசும் ஒரு விசேஷ பார்வையை `கொள்ளிக் கண்’ என்று பலராலும் நம்பப்படுவது ஒரு மூடநம்பிக்கைதான். நாம் உறவுகளிடமும், அண்டை வீட்டாரிடமும், தெருவாசிகளிடமும் நல்ல முறையாகப் பேசி, பழகி நட்பை வளர்த்துக்கொண்டால் எல்லாக் கண்களுமே நல்ல கண்களாகத்தான் காட்சியளிக்கும். விரோதம் வளர்த்தால் பார்க்கின்ற கண்கள் அனைத்துமே ‘கொள்ளிக்கண்கள்’தான்.
5. சுகுணா, சேலம்-3: தோழியின் வளைகாப்புக்குச் சென்றிருந் தேன். மனையில் அமர்ந்திருந்த தோழி கவலையாக இருந்தாள். காரணம் கேட்டதற்கு. இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டேன். அதனால் எனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் என்று பாட்டி சொன்னார் என்றாள். அறிவியல்ரீதியாக இது உண்மை இல்லை என்று புரியவைத்த பிறகே தெளிவு பெற்றாள்.
6. செல்வி, சேலம்-3: என் தங்கைக்குத் திருமணம் நிச்சயமானது. நிச்சயதார்த்தம் அன்று தட்டு மாற்றும் நேரத்தில் கரன்ட் கட்டானது. உடனே சம்பந்தி வீட்டார் யோசிக்க ஆரம் பித்தனர். இந்த ஏரியாவில் அடிக்கடி பவர் கட்டாகும் என்று புரியவைத்த பிறகே நிச்சயத்துக்கு ஒப்புக்கொண்டனர். ஆனால், என் தங்கையோ இதுபோல் மூடநம்பிக்கையில் இருக்கும் குடும்பம் எனக்கு சரிப்பட்டு வராது என்று கூறி பிடிவாதமாகத் திருமணத்தை நிறுத்திவிட்டாள்.
7. ஜி வளர்மதி, கோயம்புத்தூர்-46: நல்ல காரியத்துக்காக வெளியே கிளம்பும்போது பூனை குறுக்கிட்டால் காரியங்கள் தடங்கலாகும் என்ற மூடநம்பிக்கையைப் பெரும்பாலான மக்கள் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கின்றேன். எத்தனையோ முறை நான் செல்லும் இடங்களில் பூனை குறுக்கே வந்திருக் கிறது. ஆனால், எனக்கு எந்தக் காரியமும் தடங்கல் ஆன தில்லை. மனிதர்களைப் போன்று பூனையும் ஓர் உயிர்தானே!
8. பி.வெண்ணிலா, கீழப்பழுவூர்: உறவினர் ஒருவரின் மனைவிக்கு வயது 40. உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவரை அணுகச் சொல்லி பலரும் அறிவுறுத்தியும் இது தெய்வ குற்றம் என்று சொல்லி சாமியார், மந்திரவாதி என மனைவியை அழைத்துப் போய் பரிகாரம் என்ற பெயரில் எதை எதையோ செய்து கடைசியில் மனைவியைப் பறிகொடுத்து விட்டார். இதுபோன்ற மூடநம்பிக்கையாளர்கள் இந்த 21-ம் நூற்றாண்டிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
9. பேபி சகிலா, சென்னை-33: எங்கள் உறவுக்கார பெண்ணுக் குக் கோயிலில் திருமணம் நடந்தது. திருமணத்தன்று அந்தப் பெண் வீட்டுக்கு விலக்காகிவிட, அது புகுந்த வீட்டுக்கு ஆகாது என்ற ரீதியில் உறவினர் பேசினர். மணப்பெண் கல்யாணக்களை இல்லாமல் அழுதபடி இருந்தாள். ஒரு பெண் விலக்காவது என்பது உடலில் நடைபெறும் இயற்கை. அதைப் புரிந்துகொள் ளாமல் காயப்படுத்துவது ஏனோ? மூடநம்பிக்கைக்கு முற்றுப் புள்ளி வைப்பது எப்போது?
10. எஸ்.சுகந்தி சுந்தர், தேவூர்: சமீபத்தில் பத்திரிகையில் வந்த செய்தி இது… இளம் வயதிலேயே கணவர் இறந்துவிட அவளுக்கு நடக்கக்கூடிய சடங்குகள் அனைத்தையும் தடுத்து நிறுத்தி, அவள் எப்போதும் போல் இருக்கட்டும் என்று கூறினார் அவளுடைய மாமனார். தன் மகனின் இழப்பைக்கூட பெரிதாக நினைக்காமல் தன் மருமகளின் மீது நடக்கும் சம்பிரதாய சடங்குகள் அனைத்தையும் செய்யவிடாமல் அவளுக்கு அரணாக இருந்த அந்த மாமனார் போல் அனைவரும் துணிந்து செயல்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். பிறந்ததில் இருந்து பூவும், பொட்டும் என அனுபவிப்பது… கணவர் இறந்த பிறகு அவற்றை அழிப்பது, தாலிக்கொடியை அறுப்பது… இவை எந்த விதத்தில் நியாயம்… இனிமேலாவது திருந்த வேண்டும்.