சென்னை: எனக்கு முதல்வர் பொறுப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு என்றும் உண்மையாக இருப்பேன். ஒவ்வொரு தனிமனிதனின் கோரிக்கையையும் நிறைவேற்றுவதே என் விருப்பம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை நேற்று ஏற்றி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது சுதந்திர தின உரையில் பேசியதாவது:
எளிமை, இனிமை, நேர்மை, ஒழுக்கம், மனிதநேயம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக காந்தியடிகள் இருக்கிறார். இன்று நாட்டுக்கு அவசிய, அவசரமான கொள்கைகள் இவைதான். இத்தகைய அனைத்து மனிதநேய கொள்கைகளும் கொண்ட ‘திராவிட மாடல்’ ஆட்சியைத்தான் நடத்தி வருகிறோம். சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம்தான் திமுக.
கடந்த ஓராண்டில் தமிழகம் அடைந்த வளர்ச்சி, பல்துறை வளர்ச்சியாக அமைந்துள்ளது. பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி அளிக்கப்பட்டுள்ளது. 153 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஏராளமாக தொடங்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகம் உயர்ந்துள்ளது.
வேளாண் துறைக்கு தனி பட்ஜெட், இல்லம் தேடிக் கல்விமூலம் கல்விப் புரட்சி, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48, நான் முதல்வன் திட்டம், ஒலிம்பிக் வேட்டைதிட்டம், ரூ.2,500 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு என ஓராண்டில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனின் கோரிக்கையையும், செயல்படுத்தித் தரும் மனிதனாக இருக்க வேண்டும்என்று ஆசைப்படுகிறேன்.ஏழைமக்களின் தேவைகளை உணர்ந்து, அவர்கள் கேட்பதற்கு முன்னதாகவே அவற்றை நிறைவேற்றித் தரும் அரசாக, திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
ஆளும் கட்சி வென்ற தொகுதி, எதிர்க்கட்சி வென்ற தொகுதி என்ற பாகுபாடு எங்களுக்கு இல்லை. தமிழக முதல்வர் என்ற வகையில் அனைத்து தொகுதியும் எனது தொகுதிதான். எங்கள் முன் வரும் அனைத்து காரியங்களையும் கண்ணும் கருத்துமாக கவனித்து செயல்படுத்தி வருகிறோம். பதவியை பதவியாக இல்லாமல், பொறுப்பாக உணர்ந்து, பொறுப்புடன் செயல்பட்டு வருகிறேன்.
இந்தப் பொறுப்பை எனக்கு வழங்கிய தமிழக மக்களுக்கு என்றும் உண்மையாக இருப்பேன் என்பதை வானத்தை நோக்கி பட்டொளி வீசி பறக்கும் தேசியக் கொடியின் நிழலில் நின்று உறுதி எடுத்துக் கொள்கிறேன். குமரி முதல் இமயம் வரை பரந்து விரிந்த இந்திய நாட்டின் மக்கள் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து, ஒருதாய் மக்களாக உணர்ந்துபாடுபட்டதால்தான் கிடைத்தது சுதந்திரம். ஒற்றுமையால் கிடைத்த விடுதலையை அதே ஒற்றுமை உணர்வால்தான் காக்க முடியும். இவ்வாறு முதல்வர் பேசினார்.