சாவர்க்கர் புகைப்படம்… கர்நாடகாவில் வெடித்த மோதல் – இளைஞருக்கு கத்திகுத்து; 144 தடை உத்தரவு

பா.ஜ.க தொடர்ந்து விநாயக் தாமோதர் சாவர்க்கரை சுதந்திர போராட்ட வீரராக முன்னிலைப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அதற்கு அவ்வப்போது எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் ஷிவமோகா, அமீர் அகமது நகரில் உள்ள பள்ளிவாசலை ஒட்டிய மாலில், விநாயக் தாமோதர் சாவர்க்கர் புகைப்பட பேனரை வைத்திருக்கிறார்கள். அதற்கு ஒரு சில இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், மேலும் திப்பு சுல்தான் புகைப்படத்தை வைக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் மத்தியில் மோதல் வெடித்திருக்கிறது.

இந்த வன்முறையைக் கலைக்க காவல்துறை தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தது. அதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள காந்தி பஜார் அருகில் ராஜஸ்தானைச் சேர்ந்த பிரேம் சிங் என்ற இளைஞர் கத்தியால் குத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

பா.ஜ.க முன்னிலைப்படுத்துவதாக குற்றசாட்டு

இந்த நிலையில், அதிகாரிகள் வரும் 18-ம் தேதி வரை 144 தடை உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கின்றனர். மேலும், 20 கிமீ தொலைவில் உள்ள ஷிவமோகா மற்றும் அதன் தொழில்துறை நகரமான பத்ராவதியில் இன்று பள்ளிகள் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆயுதம் தாங்கிய காவல்துறை அந்த பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக ஷிவமோகா எஸ்.பி பி.எம் லக்ஷ்மி பிரசாத், “கத்தியால் குத்தப்பட்ட பிரேம் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. கத்திக்குத்து தொடர்பாகப் பல இளைஞர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வணிக மையத்தில் காட்சிப்படுத்தப்பட்ட சாவர்க்கர் புகைப்படத்தை அகற்றுமாறு மாலில் உள்ள ஊழியர்களை வற்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

கலவரத்தின் போது காவல்துறை

ஏற்கனவே ஷிவமோகா நகரம் பதற்றமான பகுதியாகக் கருதப்படுகிறது. தற்போது நடைபெற்ற சம்பவத்தால், மக்கள் தங்கள் வீட்டை வெளிவராமல் வீட்டுக்குள்ளேயே இருக்கின்றனராம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.