சென்னை: சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த ‘விடுதலைப் போரில் வீரத்தமிழகம்’ என்ற முப்பரிமாண ஒளி, ஒலி கண்காட்சியை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
சுதந்திர போராட்ட வீரர்களின் வீர தீர செயல்களையும், அவர்களின் தியாகங்களையும், சுதந்திரம் பெற்று தர அவர்கள் அனுபவித்த இன்னல்களையும் நினைவுகூரும் வகையில் தமிழக அரசுசார்பில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் ‘விடுதலைப் போரில் வீரத் தமிழகம்’ என்ற முப்பரிமாண ஒளி, ஒலி கண்காட்சி நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கண்காட்சியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தனர். டிஜிட்டல் திரையில், இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தர பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களும், இந்தியாவின் சுதந்திர வரலாறும் காட்சிகளாக திரையிடப்பட்டன.
கண்காட்சியில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட வீரர்கள்,தலைவர்களின் பொம்மைகள், படங்கள் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் செய்தித்துறைச் செயலர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் பங்கேற்றனர்.