மணலி அருகே தரிசு நிலத்தில் தெரு விளக்குகள்! பொதுமக்களின் பணத்தை வீணடித்த அதிமுக ஆட்சி…

சென்னை: மணலி அருகே தரிசு நிலத்தில் தெரு விளக்குகள் எரிகின்றன. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட இந்த திட்டத்தால்,  பொதுமக்களின் பணம் வீணாகி வருகிறது. இதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வெண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொதுமக்கள் வசிக்கும் சென்னை மாநகராட்சி பகுதிகளிலே பல மின்விளக்குகள் சரியான முறையில் எரியாமல் இருக்கின்றன. ஆனால், மணலி அடுத்த சாத்தாங்காடு புறநகர் பகுதியில், ஆள் அரவமே இல்லாத காட்டுப்பணியில் தெருவிளக்குகள் தேவையின்றி எரிந்துகொண்டிருக்கின்றன. இதை பார்க்கும் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

சாத்தங்காடு ஏரியை ஒட்டியுள்ள மணலி பகுதியில், முறையான சாலைகளோ, குடியிருப்புகளோ இல்லாத ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், நூற்றுக்கணக்கான தெருவிளக்குகள் எரிந்துகொண்டிருக்கின்றன.  மாநகராட்சி மின்விளக்குகளை அமைத்துள்ள இந்த பகுதி, மக்கள் வசிக்கும் இடங்களுடனும் இணைக்கப்படாமல், புதர்கள் மற்றும் புதர்களால் மூடப்பட்ட தரிசு நிலமாக கிடக்கிறது. இந்த பகுதியில், கடந்த அதிமுக ஆட்சியின்போது, அதாவது 2018 ஆம் ஆண்டுடில் இந்த  விளக்குகள் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேற்கு சென்னை பகுதிகளான அம்பத்தூர், மதுரவாயல் போன்ற பல்வேறு பகுதிகளில் மின்விளக்குகள் எரிவதில்லை. பயன்படுத்தப்படாத பகுதியில் மின்விளக்குகளுக்கு மாநகராட்சி பணம் செலவழித்தது குறித்து ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்

மக்கள் குடியிருப்பு இல்லாத இந்த பகுதியில் எதற்காக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டது என்பது குறித்து பதில் கூற மறுக்கும் அதிகாரிகள், ஒவ்வொரு தெருவிளக்கு அமைக்கவும்,  ரூ. 44,000 செலவானதாகவும், மொத்தம் 44 லட்சம் செலவிடப்பட்டதாகவும் கூறுகின்றனர். மேலும் இந்த விளக்குகள் எரிவதால், ஆண்டுக்கு  ரூ.ஒன்றரை லட்சம் வரை மின்கட்டணம் செலவாகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக, சாலை இருக்கும் இடங்களிலும், பொதுமக்களின் கோரிக்கை இருந்தால் மட்டுமே மாநகராட்சி தெருவிளக்குகளை அமைக்க வேண்டும். மேலும், சாலைகள் அல்லது தொழிற்சாலை வளாகங்கள் இருந்தால், அவர்கள் விளக்குகளை வைக்கலாம். இருப்பினும், இங்கே, இந்த மணலி வட்டாரத்தில், தரிசு நிலப்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டிருப்பது 3 ஆண்டுகளுக்கு பிறகு  இப்போதுதான் சர்ச்சையாகி உள்ளது.

இதுகுறித்து கூறிய மண்டல அலுவலர் ஆர்.கோவிந்தராஜ், இப்பிரச்னை குறித்து பரிசீலிப்பதாக மணலி மண்டல ஏடிஇ டி.சுரேஷ், மின்வாரியப் பொறுப்பாளர்  பதில் அளித்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

மேலும்,பொதுமக்கள், மணலி அருகே உள்ள பைபாஸ் சாலை அல்லது தாம்பரத்தை இணைக்கும் உயர் சாலை என அப்பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் சாலை விளக்குகள் இல்லை, அங்கு தெருவிளக்கை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில்,  தேவைகளைப் பார்க்காமல் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளனர். இது வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிக்கும் செயலாகும்” என்று ஊழல் எதிர்ப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமான அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறினார். இப்பகுதியில் ரியல் எஸ்டேட் மதிப்பை வளர்க்க இது செய்யப்படலாம் என்று ஆர்வலர்கள் நம்புகின்றனர். “விளக்குகள் இருந்தால் மட்டுமே, மக்கள் வீடுகளை வாங்கலாம். எனவே அதைச் செய்திருக்கலாம்,” என்கிறார் மணலியில் ஆர்வலர் எஸ் முருகன்.

சென்னை மாநகராட்சி, இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தரிசு நிலத்தன் மின்விளக்குகள் அமைக்க உத்தரவிட்டது யார் என்பது குறித்தும், அதற்கு துணைபோன அதிகாரிகள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.