காரைக்குடி : தேர்தல் நேரத்தில் சீட் கிடைக்காமல் சந்தர்ப்பத்திற்காக கட்சி மாறுபவர்கள் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தையடுத்து, பாஜக மாநகர் மாவட்ட தலைவராக இருந்த டாக்டர் சரவணன் அக்கட்சியில் இருந்து விலகினார். அவர் திமுகவில் சேரும் விருப்பத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், டாக்டர் சரவணன், அண்ணாமலை ஆகியோரை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
அண்ணாமலை விளக்குவாரா
காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் பணியில் இருந்து விலகிய பின் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதில் சவாரி செய்யலாம் என்று நினைத்திருந்தார். கடைசி நேரத்தில் பாஜ.க வில் சேர்ந்தார். சித்தாந்தத்தை பற்றி பேசும் அண்ணாமலை எந்த சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தார் என்பதை விளக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
எரிச்சல் மூட்டுகிறது
மேலும், மதுரை விமான நிலையத்தில் நடந்த காலணி வீச்சு சம்பவம் பற்றிப் பேசிய கார்த்தி சிதம்பரம், “தமிழக நிதி அமைச்சர் சொல்லும் புள்ளி விவரம் மத்திய நிதி அமைச்சருக்கு எரிச்சலை மூட்டுகிறது. மத்திய அமைச்சர் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் புள்ளி விவரங்களால் மட்டுமே பதில் சொல்ல வேண்டும்.
அநாகரீகமான செயல்
அது முடியாததால் தான் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். தேசியக்கொடி கட்டிய காரின் மீது காலணி வீசியது அநாகரீகம். இந்தச் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
சீட் கிடைக்காமல்
தொடர்ந்து, அமைச்சர் கார் மீதான காலணி வீச்சு சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகியது பற்றி கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம், தேர்தல் நேரத்தில் சீட் கிடைக்காமல் சந்தர்ப்பவாதமாக கட்சி மாறுபவர்கள் பற்றி கருத்து கூற விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.