புதுடெல்லி: அனைத்து மதத்தினருக்கான ‘இன்குலாப்’ கோயில், ஹரியானாவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 22 வருடங்களாக நாட்டின் சுதந்திரம் பெறப் பாடுபட்ட புரட்சியாளர்கள் பூசிக்கப்படுகின்றனர்.
சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் பிரபலமாக எழுப்பப்பட்ட கோஷம், ’இந்துஸ்தான் ஜிந்தாபாத் (இந்தியநாடு வாழ்க)’. இதை முதன்முறையாக 1921 இல் முஸ்லீம் அறிஞரான மவுலானா ஹசரத் மொய்னி எழுப்பியிருந்தார்.
சுதந்திரப்போராட்ட வீரரான மொய்னி, ஒரு சிறந்த கவிஞராகவும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவராகவும் இருந்தார். இவரது கோஷத்தை சுதந்திரப் போராட்டத்தில் தூக்கிலிடப்பட்ட பகத்சிங், தொடர்ந்து எழுப்பியதால் அது பிரபலமானது.
இவர், டெல்லியின் மத்திய சட்டப்பேரவை கட்டிடத்தில் குண்டு வைத்த பின், அங்கு இந்த கோஷத்தை எழுப்பினார். இவருடன் இருந்த சகப்புரட்சியாளரான பி.கே.தத்தும் இக்கோஷத்தை பகத்சிங்குடன் இணைந்து எழுப்பினார்.
பிறகு, இந்துஸ்தான் ரிபப்ளிக்கன் அஸோசியேஷன், கம்யூனிஸ்டு கன்சாலிடேஷன் மற்றும் அகில இந்திய ஆஸாத் முஸ்லீம் மாநாடு ஆகியவற்றின் அதிகாரபூர்வமான கோஷமாகவும், இந்துஸ்தான் ஜிந்தாபாத் நிலவியது.
அப்போது முதல் இன்று வரை பொதுமக்கள் இடையே மிகவும் பிரபலமாகத் தொடர்கிறது இந்த இந்துஸ்தான் ஜிந்தாபாத் கோஷம். இந்தநிலையில், ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தின் கும்தாலா கிராமத்தில் இன்குலாப் எனும் பெயரில் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது.
புரட்சியாளர்கள் பூஜிக்கப்படும் ஒரு மதநல்லிணக்கக் கோயிலாக இது அமைந்துள்ளது. அன்றாடம் இங்கு இந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் வந்து பூஜைகள் செய்கின்றனர்.
இக்கோயிலில் சுதந்திரப்போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜ்குரு, ஷயீத் சுக்தேவ், லாலா லஜபதிராய், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பீம் ராவ் அம்பேத்கர், அஷ்பாக் உல்லா கான் ஆகியோரின் பிறந்தநாள் கொண்டாடி, நினைவு நாள்களும் அனுசரிக்கப்படுகின்றன.
நாட்டின் எந்த இடத்திலும் இல்லாத இதுபோன்ற புரட்சி வீரர்களுக்கானக் கோயிலை 22 வருடங்களுக்கு முன் வழக்கறிஞர் வரியம்சிங் என்பவர் கட்டியுள்ளார். இந்திய ராணுவத்தில் வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினரும் இக்கோயிலுக்கு வந்து பூஜிப்பது வழக்கமாக உள்ளது.
1857 இல் மீரட் சிப்பாய் கலவரம் துவங்கக் காரணமாக மங்கள் பாண்டேவின் குடும்ப வாரிசுகளான தேவி தயாள் பாண்டே, ஷீத்தல் பாண்டே ஆகியோரும் இக்கோயிலுக்கு வருவது உண்டு. இப்பட்டியலில் ஹரியானாவின் விளையாட்டுத்துறை அமைச்சரான சந்தீப்சிங், ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்திரேஷ்குமார் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.