இலங்கை வந்தது சீன உளவுக்கப்பல்: ஒரு வாரம் துறைமுகத்தில் நிற்க போகிறது: இந்தியா உஷார்| Dinamalar

கொழும்பு: சீனாவின், ‘யுவான் வாங் 5’ என்ற உளவுக் கப்பல்,நம் அண்டை நாடான இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகம் வந்தடைந்தது. இக்கப்பல் வரும் 22ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட உள்ளது. அப்போது, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ‘இஸ்ரோ’வின் ராக்கெட் ஏவுதளம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அணு மின் நிலையம் மற்றும் நம் நாட்டு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் அந்த உளவுக் கப்பல் சேகரித்துச் செல்லக் கூடிய அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்டை நாடான சீன ராணுவத்துக்கு சொந்தமான, ‘யுவான் வாங் 5’ உளவுக் கப்பலை, ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கான கப்பலாக 2007ல், அந்நாட்டு ராணுவம் பதிவு செய்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று தாக்க கூடிய, ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை ஏவவும், அதை கண்காணிக்கவும், அது தாக்க வேண்டிய இலக்கை மிக துல்லியமாக திட்டமிட்டு அழிக்கவும் இந்த கப்பல் பயன்படுத்தப்படுகிறது. இந்த கப்பல், விண்வெளி மற்றும் செயற்கைக்கோள்களை உளவு பார்க்கும். மேலும், கடலின் ஆழம் மற்றும் அந்த பகுதியில் நீர்மூழ்கி கப்பல்களோ, நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்களோ செல்ல முடியுமா என்பதையும் ஆய்வு செய்யும் திறன் உடையது. இதுபோன்ற உளவுக் கப்பல் இந்தியா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிடமும் உள்ளன. சீனாவிடம் இதுபோன்ற ஏழு கப்பல்கள் உள்ளன.

தற்போது இலங்கைக்கு வந்த கப்பல், 728 அடி நீளமும், 85 அடி அகலமும் உடையது. சீனாவின், ‘லாங் மார்ச் 5பி’ என்ற ராக்கெட்டை ஏவ, இந்த கப்பல் சமீபத்தில் பயன்படுத்தப்பட்டது. இந்த கப்பலை இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் ஆக., 11 – 17 வரை நிறுத்தி வைக்க சீனா அனுமதி கோரியது. இந்த கப்பல் இலங்கை வந்தால், அது நம் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற காரணத்தால், மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து உளவுக் கப்பல் வருகையை நிறுத்தி வைக்கும்படி, சீன அரசிடம் இலங்கை அரசு தெரிவித்தது. இது சீனாவுக்கு ஏமாற்றத்தை அளித்தது.அதன்பின், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, சீன வெளியுறவுத் துறை அழுத்தம் கொடுத்ததை அடுத்து, கப்பல் வருகைக்கு இலங்கை அனுமதி அளித்தது.

இந்நிலையில், இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு இன்று வந்த இந்த உளவுக் கப்பல், வரும் 22 வரை அங்கு நிறுத்தி வைக்கப்பட உள்ளது.
அம்பன்தோட்டா துறைமுகம், இலங்கையின் தென் முனையில் அமைந்துள்ளது. ஐரோப்பாவையும், ஆசியாவையும் இணைக்கும் இடத்துக்கு அருகில் உள்ள இங்கு, கப்பல் போக்குவரத்து எப்போதும் அதிகளவில் இருக்கும். எனவே, யுவான் வாங் உளவுக் கப்பல், அப்பகுதியில் வரக்கூடிய மற்ற நாட்டு கப்பல்களையும் உளவு பார்க்க கூடிய வாய்ப்பு உள்ளது.

இந்த உளவு கப்பலில், ‘எலக்ட்ரானிக் வார்பேர்’ என்றழைக்கப்படும் நவீன போர் தொழில் நுட்பங்கள் உள்ளன. ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கும் போது, முதலில் அவர்களின் இணையம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை முடக்குவது வழக்கம். அதற்கு தேவையான அனைத்து நவீன கருவிகளும் இந்த உளவு கப்பலில் உள்ளது.
நம் கடற்படைக்கு சொந்தமான ஆறு படை தளங்கள் அம்பன்தோட்டாவுக்கு அருகே அமைந்து உள்ளன. அங்கு என்னென்ன தொழில்நுட்பங்கள் உள்ளன, எவ்வளவு போர் விமானங்கள், போர் கப்பல்கள், ரேடார்கள் உள்ளன. அதன் திறன் என்ன என்ற தகவல்களை அவர்கள் சேகரித்து செல்வது எளிது.
மேலும், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அனல் மின் நிலையம் உள்ளிட்டவை குறித்து ரகசிய தகவல்களை அந்த கப்பல் உளவு பார்த்து திரட்ட கூடிய வாய்ப்புள்ளது.

இலங்கையில் நின்றபடி நம் நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை கண்காணித்து, தேவையான தகவல்களை சீன கப்பல் சேகரித்துச் செல்வது, நம் ராணுவத்துக்கு பெரிய சவாலை எதிர்காலத்தில் உருவாக்கும். எனவே, இந்த கப்பலின் வருகை நம் நாட்டு பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமையும் என, ராணுவ அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். கடுமையான எதிர்ப்பை தெரிவித்தும், சீன உளவுக் கப்பல் வருகையை, இலங்கை தடுக்காதது, மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.