பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், கருத்து வேறுபாடுகள் காரணமாக, கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து, முதலமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.
இதை அடுத்து, எதிர்க்கட்சியான, லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து மெகா கூட்டணி ஆட்சி அமைக்க, நிதிஷ் குமார் முடிவு செய்தார். இதற்கு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியும் ஆதரவு தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக, பீகார் மாநில முதலமைச்சராக, எட்டாவது முறையாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் பதவியேற்றார். துணை முதலமைச்சராக, தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார்.
இந்நிலையில் இன்று, பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது, ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில், 11 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். அசோக் சவுத்ரி, லெஷி சிங், விஜய் குமார் சவுத்ரி, சஞ்சய் ஜா, மதன் சாஹ்னி, பிஜேந்திர யாதவ் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதை அடுத்து, ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில், 16 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ், அலோக் மேத்தா, சுரேந்திர பிரசாத் யாதவ், ராமானந்த் யாதவ், குமார் சர்வஜீத், லலித் யாதவ் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
காங்கிரஸ் சார்பில், அஃபாக் ஆலம், முராரி லால் கௌதம் மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா சார்பில் சந்தோஷ் சுமன் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக பதவி ஏற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கான இலாகா குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.