சென்னை: பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில் இந்தாண்டு ரேண்டம் எண் வெளியிடப்படவில்லை.
2022ம் ஆண்டுக்கான பொறியியல் தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி முதல் தொடங்கும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
இந்தாண்டு குறிப்பாக ரேண்டம் எண் வெளியிடப்படவில்லை. தர வரிசையில் ஒரே கட் ஆப் மதிப்பெண் வரும் மாணவர்களில், முன்னுரிமை மாணவரை தேர்வு செய்ய ரேண்டம் எண் பயன்படுகிறது.
கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்ட கட்-ஆஃப், மாணவர்களுக்குச் சமமாக இருந்தால், முதலில் கணித மதிப்பெண்ணும், 2-வதாக இயற்பியல் மதிப்பெண்ணும், 3-வதாக விருப்ப பாடத்தின் மதிப்பெண்ணும் கணக்கீடு செய்யப்படும்.
இந்த 3 பாடங்களின் மதிப்பெண்ணும் சமமாக இருந்தால், மொத்த மதிப்பெண் கணக்கிடப்படும். 12-ம் வகுப்பின் மொத்த மதிப்பெண்ணும் சமமாக இருந்தால், 10-ம் வகுப்பில் மாணவர்கள் எடுத்த மொத்த மதிப்பெண் கணக்கிடப்படும். அதுவும் சமமாக இருந்தால், பிறந்த தேதி கணக்கிடப்படும். மேற்கண்ட அனைத்து வழிமுறைகளும் சமமாக இருந்தால் மட்டுமே ரேண்டம் எண் கணக்கீடு செய்யப்படும். அதன்படி, ரேண்டமில் பெரிய எண் பெற்ற மாணவர்களுக்கு தரவரிசையில் முன்னுரிமை வழங்கப்படும்.
இந்நிலையில் இந்தாண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த யாரும் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெறாத காரணத்தால் ரேண்டம் எண் வெளியிடப்படவில்லை என்று உயர்க் கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தார்.