“எதிர்த்து பேசுபவர்கள் யாராக இருந்தாலும் கால்களை உடையுங்கள்” என, மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்எல்ஏ பிரகாஷ் சர்வே பேசி உள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மறைந்த பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனா கட்சி, தற்போது, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு, உத்தவ் தாக்கரே தரப்பு என, இரு தரப்பாக செயல்பட்டு வருகிறது. சிவசேனா கட்சிக்கு உரிமைக் கோரி, இரு தரப்பினரும், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த விவகாரம் நிலுவையில் இருக்கிறது.
இந்நிலையில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளரான, மகதானே சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ பிரகாஷ் சர்வே, மும்பையில் உள்ள தனது தொகுதிக்கு உட்பட்ட கோகானி பாத புத்த விஹார் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
யாராவது உங்களிடம் ஏதாவது சொன்னால், அவர்களுக்கு நீங்கள் தைரியமாக பதில் சொல்லுங்கள். நான், உங்களுக்காக இங்கே இருக்கிறேன். உங்களால் அவர்களின் கைகளை உடைக்க முடியாவிட்டால், அவர்களின் கால்களை அடித்து நொறுக்குங்கள். நான், உங்களுக்கு அடுத்த நாளே ஜாமின் வாங்கித் தருகிறேன். நாங்கள் யாருடனும் சண்டையிட மாட்டோம்; ஆனால் எங்களுடன் யாராவது சண்டையிட்டால், அவர்களை விட்டுவிட மாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
எம்எல்ஏ பிரகாஷ் சர்வேயின் இந்த பேச்சு, சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த உத்தவ் தாக்கரே தரப்பினர், எம்எல்ஏ பிரகாஷ் சர்வே மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும், எம்எல்ஏ பிரகாஷ் சர்வேவுக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டமும் நடைபெற்றது.