இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு சீனாவின் உளவுக் கப்பலான ‘யுவாங் வாங் 5’ வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உளவுக் கப்பல் இலங்கைக்கு வருவதை தடுக்க இந்தியா ராஜாங்க ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியாதான் அதிகப்படியான உதவிகளை செய்து வருகிறது. எனவே சீன உளவுக் கப்பல் தொடர்பான இந்தியாவின் கவலையை இலங்கை புரிந்துகொண்டு அதன் வருகையை தடுத்து நிறுத்தும் என அனைத்து நாடுகளும் எதிர்பார்த்திருந்தன. ஆனால், சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் கொடுத்த கடும் நெருக்கடிக்கு இலங்கை பணிந்தது. அந்நாட்டின் அம்பந்தோட்டா துறைமுகத்தை ‘யுவாங் வாங் 5’ உளவுக் கப்பல் இன்று வந்தடைந்தது. இந்தக் கப்பல் அங்கு வரும் 22-ம் தேதி வரை நிறுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சரி.. சீனாவின் கப்பல் இலங்கைகுக்கு வருவதைக் கண்டு இந்தியா ஏன் கவலைப்பட வேண்டும் என பலருக்கு கேள்வி எழலாம். அதற்கான காரணங்களை இங்கு காண்போம்.
1. தற்போது இலங்கையின் அம்பந்தோட்டா துறைமுகத்துக்கு வந்துள்ள சீனாவின் யுவாங் வாங் கப்பல் அடிப்படையில் உளவுக் கப்பல் ஆகும். இந்தக் கப்பலில் மிகவும் சக்திவாய்ந்த அதிநவீன சென்சார்கள் உள்ளன. இந்த சென்சார்கள் இந்தியா மேற்கொள்ளும் ஏவுகணை சோதனைகளை கண்டுபிடித்துவிடும். மேலும், அவை எந்த மாதிரியான ஏவுகணைகள், அவற்றில் என்னென்ன தொழில்நுட்பங்கள் இருக்கின்றன என்பன போன்ற தகவல்களையும் சீன உளவுக் கப்பல் சேகரித்துவிடும்.
இவ்வாறு தெரிந்து கொள்வதன் மூலம் இந்தியா பயன்படுத்தும் ஏவுகணைகளை முடக்கும் தொழில்நுட்பத்தை சீனா உருவாக்கக் கூடும். ஒருவேளை, இந்தியா – சீனா இடையே போர் ஏற்பட்டால் இந்த தகவல்களை சீனா தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
2. இந்த உளவுக் கப்பலானது பெருங்கடல்களின் ஆழம், நீரின் அடர்த்தி, அங்கு நீர்மூழ்கி கப்பல்களை இயக்க முடியுமா என்பன உள்ளிட்டவற்றை கண்டுபிடிக்கும் திறன் கொண்டது. ஏற்கனவே இந்தியப் பெருங்கடலின் பல்வேறு பகுதிகளில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பையும் மீறி சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது இந்தியாவுக்கு அருகே உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தால் எதிர்காலத்தில் இங்கேயும் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வாய்ப்புள்ளதாக இந்தியா அஞ்சுகிறது.
3. அம்பந்தோட்டா துறைமுகம், இலங்கையின் தென் முனையில் அமைந்துள்ளது. ஐரோப்பாவையும், ஆசியாவையும் இணைக்கும் இடத்துக்கு அருகில் உள்ள இப்பகுதியில் கப்பல் போக்குவரத்து எப்போதும் அதிகளவில் இருக்கும். எனவே, யுவான் வாங் உளவுக் கப்பல், அப்பகுதியில் வரக்கூடிய மற்ற நாட்டு கப்பல்களை உளவு பார்க்க கூடிய வாய்ப்புகளும் உள்ளன.
இந்த உளவு கப்பலில், ‘எலக்ட்ரானிக் வார்பேர்’ என்றழைக்கப்படும் நவீன போர் தொழில் நுட்பங்கள் உள்ளன. ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கும் போது, முதலில் அவர்களின் இணையம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை முடக்குவது வழக்கம். அதற்கு தேவையான அனைத்து நவீன கருவிகளும் இந்த உளவு கப்பலில் இருக்கின்றன.
இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ஆறு படை தளங்கள் அம்பந்தோட்டாவுக்கு அருகே அமைந்து உள்ளன. அங்கு என்னென்ன தொழில்நுட்பங்கள் உள்ளன, எவ்வளவு போர் விமானங்கள், போர் கப்பல்கள், ரேடார்கள் உள்ளன. அதன் திறன் எத்தகையது என்ற தகவல்களையும் அந்தக் கப்பல் சேகரிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.
4. இவை அனைத்துக்கும் மேலாக, இலங்கையின் அம்பந்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு சீனா வாங்கிவிட்டது. இலங்கை பெற்ற கோடிக்கணக்கான கடனுக்கு பதிலாக இந்த துறைமுகத்தை சீனா வாங்கியுள்ளது. அதன்படி பார்த்தால், 99 ஆண்டுகள் இந்த துறைமுகத்தை சீனா தனது கட்டுப்பாட்டில் வைக்க முடியும். அங்கு கடற்படை தளத்தை கூட சீனா கட்ட முடியும். அவ்வாறு நடந்தால், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலாக இருக்கும். ஏற்கனவே லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியாவிடம் மோதி வரும் சீனா, அம்பந்தோட்டாவில் கடற்படை தளம் அமைத்தால் இந்தியாவின் தென் பகுதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்.
இதுபோன்ற காரணங்களால் தான் சீன உளவுக் கப்பலின் இலங்கை வருகையை இந்தியா விரும்பவில்லை.