குஜராத் கூட்டு பலாத்கார வழக்கில் விடுதலையான குற்றவாளிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு!

குஜராத் கலவரத்தின் போது கர்ப்பிணிப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான ஆயுள் தண்டனை குற்றவாளிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு மிகப்பெரிய கலவரம் மூண்டது. அப்போது ரன்திக்பூர் கிராமத்தைச் சேர்ந்த 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு (21) கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 11 பேருக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் 11 பேரும் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனிடையே, பில்கிஸ் பானுவுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலைவாய்ப்பு மற்றும் அவர் விரும்பும் பகுதியில் வீடு ஆகியவற்றை 2 வாரங்களுக்குள் அளிக்கும்படி குஜராத் அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

image
இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்த குற்றவாளிகளில் ஒருவர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 432,433-ன் கீழ் தண்டனையை ரத்து செய்யக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

குற்றவாளியின் தண்டனையை ரத்து செய்வது குறித்துப் பரிசீலிக்குமாறு, குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, குஜராத் அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் தலைவராக பஞ்சமஹால் மாவட்ட ஆட்சியர் சுஜல் மயாத்ரா நியமிக்கப்பட்டார். இந்த குழு 11 குற்றவாளிகளின் விடுதலைக்கு ஆதரவாக ஒருமனதாக முடிவெடுத்தது. அதன்படி, 11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கிய குஜராத் அரசு தண்டனைக் காலம் முடியும் முன்பே அவர்களை விடுதலை செய்துள்ளது. சிறையில் இருந்து விடுதலையான குற்றவாளிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இச்சூழலில், குற்றவாளிகள் விடுதலை குறித்து பேசிய பில்கிஸ் பானோ தரப்பு வழக்கறிஞர், ”இது கொலை வழக்கு மட்டுமல்ல, கொடூரமான கூட்டு பலாத்கார வழக்கும் ஆகும். அரசு இப்படி ஒரு முடிவை எடுக்கும்போது, பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கை இழக்கிறார்கள். குஜராத் அரசின் விருப்பத்தை உச்சநீதிமன்றம் கேட்டபோது, குற்றவாளிகளுக்கு எதிராக பரிசீலித்திருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

image
11 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டது குறித்து ஊடகங்கள் வாயிலாகவே தாம் அறிந்து கொண்டதாக பில்கிஸ் பானுவின் கணவர் யாகூப் ரசூல் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ”இவர்களது விடுதலை தொடர்பான மனு எப்போது தொடரப்பட்டது என்பது குறித்தோ, முடிவு எப்போது எட்டப்பட்டது என்பது குறித்தோ எங்களுக்கு எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து எந்த நோட்டீஸும் எங்களுக்கு வரவில்லை. இது பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ள எங்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. இது குறித்து தற்போது என்ன சொல்வது என்று கூடத் தெரியவில்லை. எங்களுடைய அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், குடும்பத்தினர் என இந்தக் கலவரத்தில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்” என்கிறார் அவர்.

விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான ராதேஷ்யாம் ஷா கூறுகையில், ”வெளியே வந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.  எனது குடும்பத்தினரை சந்தித்து புதிய வாழ்க்கையைத் தொடங்கப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க: ”இந்தியாவின் பெயரை இப்படி மாற்றுங்கள்”.. கோரிக்கை விடுக்கும்முகமது ஷமியின் முன்னாள் மனைவி!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.