திருவண்ணாமலை மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் கபடி பயிற்சியின் போது கரணம் அடிக்கும் போது இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் களத்துமேட்டு தெருவில் கடந்த 8 ஆம் தேதி மாரியம்மன் கோவில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதில் களத்துமேட்டு கே.எம்.எஸ். கபடி குழுவினர் கபடி போட்டிக்கான பயிற்சி மேற்கொண்டனர்.
அப்போது ஆரணி டவுன் களத்துமேட்டு தெருவை சேர்ந்த 34 வயதான கபடி வீரர் வினோத்குமார் என்பவரும் கபடி பயிற்சி மேற்கொண்டார். அப்போது வினோத் தொடர்ந்து கரணம் அடிக்கும் பயிற்சி மேற்கொண்ட போது திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சக வீரர்களும் ஊர்ப் பொதுமக்களும் உடனடியாக வினோத்குமாரை ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்கைகாக அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வினோத்குமார் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினால் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி வினோத் குமார் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வினோத்குமாருக்கு திருமணமாகி சிவகாமி என்ற மனைவியும் சந்தோஷ், கலையரசன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். மயங்கி விழும் முன் வினோத்குமார் கரணம் அடிக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முன்னதாக கடந்த மாதம் 24 ஆம் தேதி கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே கபடி விளையாடும் போது மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே பெரியபுரங்கணி கிராமத்தைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவர் தனது நண்பர்களுடன் முத்தாண்டிகுப்பம் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட மானடிக் குப்பத்தில் நடந்த கபடி போட்டியில் கலந்து கொண்டு எதிரணியிடம் ரைட் சென்று திரும்பி எல்லைக்கோட்டை தொடும்போது திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பரகளும் போட்டி நடுவரும் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிர் இழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி அடங்குவற்குள் மற்றொரு இளைஞரும் கபடி பயிற்சியில் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM