கோவை: கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விடுதியில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கு, சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் பிரசோத்குமார் (18). இவர், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பயோ டெக் பட்டப்படிப்பு படித்து வந்தார். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து பிரசோத்குமார் வகுப்புக்குச் சென்று வந்தார்.
இந்நிலையில், கடந்த 10-ம் தேதி மாணவர் பிரசோத்குமார் வகுப்புக்குச் செல்லாமல் விடுதியில் உள்ள தனது அறையிலேயே இருந்துள்ளார். 7.30 மணிக்கு அவரை நண்பர்கள் பார்த்துள்ளனர். பின்னர், மீண்டும் 10.45 மணிக்கு நண்பர்கள் விடுதி அறைக்கு வந்தபோது, அறையின் கதவு உள் பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது, விடுதி அறையில் மாணவர் பிரசோத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சாயிபாபா காலனி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், மாணவர் வனவியல் படிப்பு படிக்க விரும்பியதாகவும், ஆனால் அந்த பாடப் பிரிவு கிடைக்காததால், பயோடெக் படிப்பில் சேர்ந்ததாகவும், தான் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காததால், வேறு வழியின்றி பயோடெக் படித்து வந்ததும், விரும்பிய பாடப் பிரிவு கிடைக்காத மன உளைச்சலில் இருந்ததாலும் மாணவர் பிரசோத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
டிஜிபி உத்தரவு : இந்நிலையில், மாணவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கை மாநகர போலீஸாரிடம் இருந்து கோவை மாநகர சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சமீபத்தில் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மாணவர் தற்கொலை வழக்கு, உள்ளூர் போலீஸாரிடம் இருந்து, கோவை மாநகர சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் புதியதாக முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாணவரின் உடன் படிக்கும் மாணவர்கள், பேராசிரியர்கள், விடுதி நிர்வாகிகள், மாணவனின் பெற்றோர் உள்ளிட்டோரிடம் போலீஸார் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.