அமைச்சருடன் மோதிய டி.ஐ.ஜி; ஷாக் தந்த அரசியல் மின்சாரம்!

வேலூர் காவல் சரக டிஐஜியாக பணியாற்றி வந்தவர் ஆனி விஜயா. இவர், மீது தமிழ்நாடு காவல் துறையில் நல்ல அபிப்ராயம் உள்ளது. இவருக்கு கொடுக்கப்படும் பணிகளை திறமையுடன் செய்து முடிப்பதில் கைதேர்ந்தவர் என காவல் துறை வட்டாரத்திலேயே பரவலாக ஒரு பேச்சு உள்ளது.

இந்நிலையில் வேலூர் காவல் சரக டிஐஜி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு புதிய பணியிடம் உடனடியாக ஒதுக்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதே சமயம் காஞ்சிபுரம் டி.ஐ.ஜி சத்ய பிரியா வேலூர் சரக டி.ஐ.ஜி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணாமலையின் அரசியல் கார்த்திக் சிதம்பரம் விமர்சனம்

இந்த நிலையில் வேலூர் காவல் சரக டிஐஜியாக இருந்த ஆனி விஜயா மாற்றப்பட்டது தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் உலா வருகிறது. இது தமிழக காவல் துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது வேலூர் காவல் சரக டிஐஜி ஆனி விஜயா மாற்றப்பட்ட விவகாரத்தில் தமிழக கைத்தறித் துறை அமைச்சர் காந்தியின் பின்புலம் இருப்பதே காரணம் என சொல்லப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தை பொறுத்தவரை வாலாஜா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் திருட்டு அதிகமாக நடந்து வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இன்ஸ்பெக்டர் காந்தியப்பனை சமீபத்தில் இடமாற்றம் செய்து டிஐஜி ஆனி விஜயா உத்தரவிட்டுள்ளார்.

இன்ஸ்பெக்டர் காந்தியப்பன் அரசியல்வாதிகளுக்கு விசுவாசமானவர் என கூறப்படும் நிலையில் இடமாற்றம் குறித்து தகவலறிந்த அமைச்சர் காந்தி ஏகத்துக்கும் டென்ஷன் ஆகியுள்ளார்.

உடனே டி.ஐ.ஜியை தொடர்பு கொண்ட அமைச்சர், ‘உடனடியாக இடமாற்றம் உத்தரவை ரத்து செய்யுங்கள்’ என கூறியுள்ளார். ஆனால் டி.ஐ.ஜி ஆனி விஜயாவோ, ‘காவல் துறை விவகாரங்களில் நீங்கள் தலையிட வேண்டாம்.

என்னுடைய எல்லையில் பிரச்சனை என்றால் நான்தான் பதில் சொல்ல வேண்டும்’ என்று கூறி அமைச்சர் காந்தியை நோஸ்கட் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை அமைச்சர் காந்தி மேலிடத்துக்கு கொண்டு சென்றதன் விளைவாக தான் டி.ஐ.ஜி ஆனி விஜயா மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், அமைச்சர் தரப்பை சேர்ந்தவர்கள் இந்த விவகாரத்தை முற்றிலும் மறுத்துள்ளதோடு, நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் டி.ஐ.ஜி ஆனி விஜயா மெத்தனம் காட்டியதால் மாற்றப்பட்டிருக்கலாம் என விளக்கம் அளிக்கின்றனர்.

இதுகுறித்து சமூக வலைதளவாசிகள் கூறுகையில்,‘மணல் திருட்டில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை கொடுப்பதை விட்டுவிட்டு வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயாவை காத்திருப்போர் பட்டியலில் வைப்பது எந்த விதத்தில் நியாயம்?

இதிலிருந்து, ஒன்று நமக்கு நன்றாக புரிகிறது. இந்த கேடுகெட்ட அமைச்சருக்கும், மணல் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது. நேர்மையாக பணி செய்த டிஐஜி ஆனி விஜயா போன்றவர்களை தண்டிப்பது சரியல்ல’ என சற்று காட்டமாகவே விமர்சிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.