சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் என்கிற பெருமையை பெறுகிறது.
ஐமேக்ஸ் திரையரங்குகளில் பொன்னியின் செல்வனை ரசிகர்கள் பிரம்மாண்டமாகவும் துல்லியமாகவும் கண்டு ரசிக்கலாம் என்கிற அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
யானையில் ஆதித்த கரிகாலன் இருக்கும் போஸ்டரே தெறிக்குதுன்னு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதைத்தான் எதிர்பார்த்தோம்
பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. எம்ஜிஆர், கமல்ஹாசன், ராஜமெளலி என பலரும் கனவு கண்ட காவியத்தை படமாக பல தடைகளை தாண்டி உருவாக்கி உள்ளார் இயக்குநர் மணிரத்னம். இந்தளவுக்கு ஸ்பெஷல் புரமோஷனைத் தான் எதிர்பார்த்தோம் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஐமேக்ஸில் பொன்னியின் செல்வன்
ஜேம்ஸ் பாண்டின் நோ டைம் டு டை உள்ளிட்ட ஹாலிவுட் படங்கள் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாகி ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகி வந்த நிலையில், முதல் முறையாக ஒரு தமிழ்த் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ளதாக லைகா நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐமேக்ஸ் என்றால் என்ன
IMAX – Image Maximum. பொதுவாக இப்போது தியேட்டர்களில் நாம் சென்று பார்க்கும் படங்களை விட 3 மடங்கு பெரியதாகவும் துல்லியமாகவும் தெரியும் என்கின்றனர். 1966ல் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. 1970ம் ஆண்டு ஜப்பான் நாட்டு திரைப்படமான டைகர் சைல்ட் படம் தான் முதல் ஐமேக்ஸ் திரைப்படம் என்கின்றனர்.
ஐமேக்ஸில் பிகில்
இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் தான் ஐமேக்ஸ் தியேட்டரில் வெளியான முதல் தமிழ் திரைப்படம். ஆனால், அந்த படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் முதல் ஐமேக்ஸ் திரைப்படம் என்கிற அறிவிப்புடன் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் பங்கேற்பார்
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவை இம்மாத இறுதிக்குள் பிரம்மாண்டமாக நடத்த இயக்குநர் மணிரத்னம் மற்றும் லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.