அன்று புறக்கணிப்பு:
ஏப்ரல் 14… தமிழ் புத்தாண்டையொட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர்
உள்ளிட்டோருக்கு தேநீர் விருந்துக்காக அழைப்பு விடுத்திருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆனால் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அவற்றை மாதக்கணக்கில் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். ஒப்புதல் அளிக்கும்படி கேட்டால் அவை பரிசீலனையில் உள்ளது என்ற ஒரே பதிலே அவரிடம் இருந்து வருகிறது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, தமிழகத்தின் நலன்களுக்கு எதிரான செயலாகவே பார்க்க வேண்டி உள்ளது. இத்தகைய சூழலில் அவர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பது சட்டமன்றத்தின் மாண்பை குலைக்கக் கூடியதாகவும், ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் அமைந்துவிடும். எனவே ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அப்போது பகிரங்கமாக புறக்கணித்தது.
இன்று பங்கேற்பு:
அதேசமயம், நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி தமது மாளிகையில் நேற்று தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் முதல்வர் ஸ்டாலினுடன் தமிழக அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். இதன் மூலம் தமிழ் புத்தாண்டின்போது கவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணிக்க திமுக அரசு சொன்ன அனைத்து காரணங்களும் இப்போது இல்லாமல் போய்விட்டனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதாவது ஆளுநர் ஆர்.என்.ரவி இப்போதும் சனாதனம், துப்பாக்கி எடுப்பவர்களுக்கு துப்பாக்கியால்தான் பதில் என்று எப்போதும் போல் தன் பாணியில்தான் பேசி கொண்டிருக்கிறார். நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய மசோதாவை இன்னும் அவர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தாரா, இல்லையா என்பது கூட யாருக்கும் அதிகாரபூர்வமாக தெரியாது. இப்படி எந்த விதத்திலும் ஆளுநர் தன் போக்கை மாற்றி கொள்ளாத நிலையில், முதல்வர் ஸ்டாலின் மட்டும் நான்கே மாதத்தில் ஆளுநர் மாளிகை தேநீ்ர் விருந்தில் பங்கேற்கும் அளவுக்கு மாறிப் போனது ஏன்? என்ற கேள்வி அரசியல் அரங்கில் பரவலாக எழுந்துள்ளது.
இபிஎஸ் துணிச்சல்:
ஸ்டாலினின் இந்த திடீர் மனமாற்றம் ஒருபுறம் இருக்க, அதே ஆளுநர் அளித்த தேநீ்ர் விருந்தில் தமிழ் புத்தாண்டு தினத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, நேற்றைய தேநீர் விருந்தை மொத்தமாக புறக்கணித்துள்ளதும் தமிழக அரசியலில் பேசுபொருள் ஆகி உள்ளது.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தன் தரப்பு கருத்தை கேட்க பிரதமர் மோடியோ, பாஜக முன்னாள் தலைவர் அமித் ஷாவோ தயாராக இல்லை; அத்துடன் ஓபிஎஸ்ஸை பாஜக தலைமை இன்றும் மென்மையான முறையிலேயே அணுகி வருகிறது. மேலும் முன்னாள் முதல்வர் என்ற முறையிலோ, கூட்டணி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற வகையிலோ டெல்லியிலோ, சென்னையிலோ பிரதமர் மோடி நினைத்திருந்தால் சில நிமிடங்கள் தனியாக இபிஎஸ்ஸை சந்தித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு எதுவும் நிகழவில்லை.
அப்படி இருக்கும்போது மத்திய அரசின் பிரதிநிதியாக மாநிலத்தில் செயல்படும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தான் மட்டும் ஏன் பங்கேற்க வேண்டும் என்று இபிஎஸ் நினைத்திருக்கலாம். அதனால் அவர் கவர்னரின் டீ பார்ட்டியை புறக்கணித்திருக்கலாம். என்னை மதித்தால் நானும் உங்களை மதிப்பேன் என்று இதன் மூலம் பாஜகவுக்கு அவர் மெசேஜ் சொல்லி இருக்கலாம்.
எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியே ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்து, அதன் மூலம் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது, தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறிக் கொண்டு, அவர் அளித்த தேநீர் விருந்தில் இந்த முறை ஸ்டாலின் பங்கேற்றது ஏன்? இந்த விஷயத்தில் இபிஎஸ்ஸுக்கு இருந்த துணிச்சல் ஸ்டாலினுக்கு இல்லாமல் போனது ஏன்? என்ற கேள்வி தமிழக அரசில் அரங்கிவ் பரவலாக எழுந்துள்ளது.