“வேண்டாம், வேண்டாம்.. விமான நிலையம் வேண்டாம்!”.. கருத்து கேட்பு கூட்டத்தில் ஒலித்த கோஷம்!

காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பில் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தங்கள் பகுதிக்கு விமான நிலையம் வேண்டாம் என சுமார் 12 கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இன்று 12 கிராம மக்களின் முக்கியஸ்தர்களை அழைத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் அமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
image
கூட்டம் 10 மணிக்கு துவங்கும் என கூறப்பட்ட நிலையில் 12:00 மணி வரை கூட்டம் துவங்கவில்லை என்று கூறப்படுகிறது. மக்கள் நல்லுறவு மையத்தில் அனைவரும் அமர வைக்கப்பட்டு இருந்த நிலையில் அங்கிருந்து ஒவ்வொரு கிராமமாக அழைத்து அதன் அருகில் உள்ள மற்றொரு அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
image
இதனைத் தொடர்ந்து வந்திருந்த கிராம முக்கியஸ்தர்கள் “எங்களை தனித்தனியாக அழைத்து கூட்டம் நடத்தக் கூடாது. கூட்டம் துவங்குவதாக சொல்லி இவ்வளவு நேரம் ஆகியும் இன்னும் துவங்கவில்லை. இனிமேல் நீங்கள் எங்கள் பகுதிக்கு வந்து ஆய்வுக் கூட்டம் நடத்துங்கள்” எனக் கூறிவிட்டு வெளியேறினர். இதனால் கூட்டம் நடைபெறாமல் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் கிராம மக்கள் “வேண்டாம் வேண்டாம் விமான நிலையம் வேண்டாம்! வேண்டும் வேண்டும் விவசாய நிலங்கள் வேண்டும்!” என கோஷமிட்டவாறு கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.
image
இதனைத் தொடர்ந்து மதியம் 12.30 மணியளவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட அமைச்சர்கள் வந்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
imageSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.