பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்ற ரஷ்யா தாய்மார்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது.
சோவியத் காலத்தில் வழங்கப்பட்ட அந்த விருதை மீண்டும் வழங்க ரஷ்ய அதிபர் புடின் முடிவு செய்துள்ளார்.
ரஷ்யாவில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றடுத்து வளர்க்கும் தாய்மார்களுக்கு சோவியத் காலத்தில் வழங்கப்பட்ட கௌரவ விருதான ‘Mother Heroine’ விருதை மீண்டும் அறிவித்துள்ளார் ஜனாதிபதி விளாடிமிர் புடின்.
ரஷ்யா-உக்ரைன் போரின் போது மோசமடைந்துள்ள மக்கள்தொகை நெருக்கடியை மாஸ்கோ எதிர்கொண்டுள்ள நிலையில் புடின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Mother Heroine என்பது சோவியத் யூனியனில் ஒரு கெளரவப் பட்டமாகும், இது ஒரு பெரிய குடும்பத்தை தாங்கி வளர்ப்பதற்காக வழங்கப்பட்டது, அதாவது 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களுக்கு இது பொருந்தும்.
ரஷ்ய செய்தி நிறுவனமான TASS, திங்களன்று (ஆகஸ்ட் 15) வெளியிடப்பட்ட சட்டத் தகவல்களின் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் வெளியிடப்பட்ட ஒரு ஆணையில், இந்த விருது பெரும் தாய்மார்களுக்கு 1 மில்லியன் ரூபிள் ( கிட்டத்தட்ட இலங்கை ரூ.60 லட்சம்) மொத்தத் தொகையாக கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த விருதை 10 அல்லது மேற்பட்ட குழந்தைகைப் பெற்ற ரஷ்ய குடிமகள் மட்டுமே பெறமுடியும்.
மேலும் இந்த ஆணையின்படி, தகுதி பெற்ற தாய்மார்கள் தங்களின் 10-வது குழந்தைக்கு ஒரு வயது நிறைவடைந்தவுடன் விருது கிடைக்கும். போரிலோ, பயங்கரவாதச் செயலிலோ அல்லது ஏதேனும் அவசரச் சூழ்நிலையிலோ ஒரு குழந்தையை இழந்தாலும் அவர்கள் விருதுக்கு தகுதி பெறுவார்கள்.
‘Mother Heroine’ விருது முதன்முதலில் 1944-ல் முன்னாள் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினால் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது பெருமளவிலான மக்கள் தொகையை இழந்தபோது இது அறிவிக்கப்பட்டது. 1991-ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியுடன், பட்டம் வழங்கப்படுவதும் நிறுத்தப்பட்டது.
சமீபத்திய தசாப்தங்களில், ரஷ்யாவில் மக்கள்தொகை கிட்டத்தட்ட நிலையான சரிவைக் கண்டது, இது அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 400,000 பேர் குறைந்த பின்னர் மொத்த மக்கள் தொகை 145.1 மில்லியனாகக் குறைந்தது.