டுப்லின்,
அயர்லாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கெவின் ஓ பிரையன் (37 வயது), சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 2006ல் அறிமுகமான கெவின், இதுவரை 3 டெஸ்ட், 153 ஒருநாள் மற்றும் 110 டி20 போட்டிகளில் விளையாடி 5850 ரன்கள் மற்றும் 172 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அயர்லாந்து கிரிக்கெட் அணி சர்வதேச அரங்கில் வரலாற்று வெற்றிகளை பெற கெவின் ஓ பிரையனின் பங்கு மிக முக்கியமாகும். குறிப்பாக கெவின் ஓ பிரையன் 2011 ஐசிசி உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 63 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார்.
அவரது சதம் அப்போது உலகக் கோப்பையில் அதிவேக சதம். இந்த போட்டியில் அயர்லாந்து அணி 328 என்ற இலக்கை துரத்தி வெற்றி பெற்றது. இந்த ஒரு போட்டியின் மூலம் இவர் உலக அளவில் புகழ் பெற்றார்.
தனது ஓய்வு முடிவு குறித்து தெரிவித்துள்ள அவர், “16 வருடங்கள் எனது நாட்டிற்காக விளையாடிய பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவிக்கிறேன். ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையில் விளையாடிவிட்டு ஓய்வு பெறலாம் என நினைத்து இருந்தேன்.
ஆனால் கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பைக்குப் பிறகு அயர்லாந்து அணியில் நான் இடம் பெறவில்லை. தேர்வாளர்களும் நிர்வாகமும் வேறு முடிவில் உள்ளனர் என்று நான் உணர்கிறேன், “என கெவின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.