விசிக தலைவர் திருமாவளவன் மணிவிழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “சனாதனவாதிகளால் நான் குறிவைத்து தாக்கப்படுகிறேன். திருமாவளவன் நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் சகோதரன் ஸ்டாலின் சொல்கிறேன். பாஜகவோடு துளி சமரசமும் செய்யமாட்டான் இந்த ஸ்டாலின்.” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 60 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கலைவாணர் அரங்கில் மணிவிழா கொண்டாட்டம் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “95 வயது வரை வாழ்ந்த பெரியாரும், கலைஞரும் தமிழ் சமூகத்திற்காக வாழ்ந்தார்கள். திருமாவும் அது போல் வாழ வேண்டும். கல்லூரிக்காலங்களில் திமுகவின் உள்ளிருந்தும், தற்போது கூட்டணியில் இருந்தும் தோள் கொடுக்கிறார் திருமாவளவன். எப்போதும் வெளியே சென்றதில்லை இவர்.
தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்று நான் மேடைக்காக சொல்லவில்லை. நம்முடையது கொள்கைக் கூட்டணி. நம்மை யாரும் பிரிக்க முடியாத தமிழர்களும், நாகர்களும் இந்த நாட்டின் பூர்வகுடிகள் என்று சொன்னவர் அம்பேத்கர். திராவிட மாடல் கொள்கை என்ன என்று அவர் (திருமாவளவன்) பேட்டியை 2 நாட்களுக்கு முன் பார்த்தேன். ஆரியத்துக்கு எதிரான அனைத்தும் திராவிடம் தான் என்று தெரிவித்திருந்தார்.
ஈவெரா பெயரை கலைஞரை விட அதிகம் சொல்வது ஸ்டாலின் தான் என்று இணையத்தில் எழுதிய முகம்தெரியாத சகோதரருக்கு நன்றி. தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் திராவிட கருத்தை நிறைவேற்றத் தான் இந்த ஆட்சி என்று பெருமிதத்தோடு குறிப்பிடுகிறேன். கோட்டையில் இருந்தாலும், அறிவாலயத்தில் இருந்தாலும் கொள்கை ஒன்று தான்.
குறைந்தபட்ச சமரசத்தைக் கூட பாஜக, ஆர்எஸ்எஸ் உடன் திமுக செய்து கொள்ளாது. காவடி தூக்கவா நான் டெல்லி போகிறேன் ? கை கட்டி வாய் பொத்தி நிற்கவா நான் போகிறேன். நான் கலைஞரின் பிள்ளை. திமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த உறவும் கிடையாது. திருமாவளவன் நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் சகோதரன் ஸ்டாலின் சொல்கிறேன். பாஜகவோடு துளி சமரசமும் செய்யமாட்டான் இந்த ஸ்டாலின்.
சனாதனவாதிகளால் தமிழக அரசு அதிகப்படியான தாக்குதல்களுக்கு உள்ளாகிறது. குறிப்பாக நான் கூறி வைத்து தாக்கப்படுகிறேன். சனாதனவாதிகளை அந்நியப்படுத்துவோம் என்று திருமாவளவனோடு சேர்ந்து நானும் குரல் கொடுக்கிறேன். வகுப்பு வாத சக்திகளை நாம் ஒன்றிணைந்து வீழ்த்துவோம் இதுதான் திருமாவளவனின் அறுபதாவது பிறந்த நாளில் நான் கொடுக்கின்ற மிகப்பெரிய கொள்கை பரிசு” என்று பேசினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM