கூட்டு பலாத்காரம், 7 பேர் படுகொலை பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் விடுதலை: பொதுமன்னிப்பு என்ற பெயரில் குஜராத் அரசு சர்ச்சை உத்தரவு

அகமதாபாத்: குஜராத்தில் கர்ப்பிணி பெண்ணாக இருந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம், 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை அம்மாநில அரசு பொது மன்னிப்பு என்ற பெயரில் விடுதலை செய்திருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் பிரதமரை கடுமையாக விமர்சித்துள்ளன. குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு, ரன்திக்பூர் கிராமத்தில் 5 மாத கர்ப்பிணி பில்கிஸ் பானு  கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேருக்கு கடந்த 2008ம் ஆண்டு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேல்முறையீட்டிலும் அவர்களின் தண்டனை உறுதி செய்யப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவரான ராதேஷியாம் ஷா, முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து குஜராத் மாநில அரசு முடிவெடுக்க உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் சிறையில் இருந்த 11 குற்றவாளிகளுக்கும் குஜராத் அரசு பொது மன்னிப்பு வழங்கி சுதந்திர தினமான நேற்று முன்தினம் விடுதலை செய்துள்ளது. இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளன. இது குறித்து பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவின் கணவர் யாகூப் ரசூல் கூறுகையில், “ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. இது பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை. குஜராத் அரசு எங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரண தொகை வழங்கியது. இதனை மகன்களின் கல்வி செலவுக்கு பயன்படுத்தி விட்டோம். அரசு எங்களுக்கு வீடோ,  வேலை வாய்ப்போ வழங்கவில்லை,” என்றார்.* இதுதான் அமிர்த பெருவிழாவா?காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில், “செங்கோட்டையில் பிரதமர் சுதந்திர தினத்தன்று பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, அதிகாரமளித்தல் உள்ளிட்ட மிகப்பெரிய விஷயங்கள் குறித்து பேசினார். ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் குஜராத் அரசு பாலியல் பலாத்காரம் செய்தவர்களை விடுதலை செய்துள்ளது. அவர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். இது தான் அமிர்த பெருவிழா? பிரதமர் பேசும் வார்த்தைகளில் அவருக்கு நம்பிக்கை உள்ளதா? என்பது குறித்து அவர் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்,” என்றார். ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி ‘இதுதான் பாஜவின் விடுதலை அமிர்த பெருவிழா பாதிப்பு. கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது,’ என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது, “இதுதான் புதிய இந்தியாவின் உண்மையான முகம். தண்டனை பெற்ற கொலையாளிகள், பலாத்காரம் செய்தவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். நீதிக்காக போராடிய டீஸ்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்,’ என்று பதிவிட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சகேத் கோகலே கூறுகையில், “பில்கிஸ் பனோவுக்கு எதிராக கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட 11 அரக்கர்களை குஜராத் அரசு விடுவித்துள்ளது,” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.