விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில், கோபி தனது மனைவி பாக்யாவுக்கு இழைத்த துரோகத்தை எதிர்த்து பாக்யாவின் செயலுக்கு மகன் எழில் ஆதரவாக பேசுவதைப் பார்து ஈகோயிஸ்ட் கணவர்களால் அல்லல்படும் பெண்களின் குமுறல் இது, சபாஷ் எழில் என்று பாராட்டி வருகிறார்கள்.
தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தற்போது பாக்யலட்சுமி சீரியல்தான் டிஆர்பியில் டாப். பாக்கியலட்சுமி சீரியலின் கதை ரொம்ப எளிமையானது.
குடும்பமே உலகம் என்று வாழும் இல்லத்தரசி பாக்கியலட்சுமி என்கிற பாக்யா. கணவன் கோபி. பாக்யா பள்ளிப் படிப்பு மட்டுமே படித்தவள். செழியன், எழில் என வளர்ந்த மகன்கள், பள்ளிக்கூடம் படிக்கும் மகள் இனியா. மூத்த மகன் செழியனின் மனைவி ஜெனி. மாமனார் ராமமூர்த்தி, மாமியார் ஈஸ்வரி என கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்கள். பாக்யா இல்லத்தரசி மட்டுமல்ல கணவன் மாமியார் எதிர்ப்புகளைத் தாண்டி ஒரு கேட்டரிங் தொழில் நடத்தி வருகிறாள்.
கோபி படித்த நாகரிகமான தனக்கு எதுவுமே தெரியாத பாக்யாவைக் கல்யாணம் செய்துவைத்துவிட்டார்கள் என்று அவளுடன் இத்தனை ஆண்டுகாலம் தாமரை இலை நீர் போல ஒட்டி ஒட்டாமல் வாழ்ந்துவிட்டான். இந்த சூழ்நிலையில்தான், தனது கல்லூரி கால காதலி ராதிகாவைப் பார்த்து காதலிக்கிறான். ராதிகாவும் பாக்யாவும் தோழிகள் என்று தெரிந்தும் காதலை வளர்த்து திருமணம் வரை செல்கிறது. பாக்யாவை அவளுக்கே தெரியாமல் விவாகரத்து செய்ய நீதிமன்றம் அழைத்துச் செல்கிறான் கோபி.
இதனிடையே, கோபி – ராதிகா உறவு பாக்யாவுக்கு தெரியவந்து குடும்பத்தில் பூகம்பம் வெடிக்கிறது. கோபி தன்னை விவாகரத்து செய்வதையும் அறிகிறாள். ராதிகா – கோபி உறவு தெரியவந்ததும் பாக்யா தனது கணவன் கேட்ட விவாகரத்தை கொடுக்கிறாள். மாமனார், மாமியார், மகள், மகன் என யார் சொல்லியும் கேட்காமல், கணவன் செய்த துரோகத்தால், பாக்யா தனது சுயமரியாதைதான் முக்கியம் என்று விவாகரத்து செய்கிறாள். மற்றொரு பக்கம் கோபி காதலி ராதிகாவுடன் வாழவும் திட்டம் போட்டு காய் நகர்த்தி வருகிறான்.
பாக்யா தனது கணவனுக்கு டைவர்ஸ் கொடுத்துவிட்டு, தனது மகன் எழில் உடன் வீட்டுக்கு செல்கிறாள். அங்கே,
வீட்டில் இருக்கும் மகன் செழியன், மருமகள் ஜெனி, மகள் இனியா, மாமியார் ஈஸ்வரி பாட்டி, மாமனார் ராமமூர்த்தி, என எல்லோரும் பாக்யாவை வீட்டை விட்டு போக வேண்டாம் என்று கெஞ்சுகின்றனர். ஆனால், கோபி, பாக்யாவை வீட்டைவிட்டு துரத்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். இந்த வீட்டில் பாக்கியாவின் சொந்த உழைப்பில் வாங்கிய ஒரு பொருள் கூட இல்லை என கோபி பாக்யாவை அசிங்கப்படுத்துகிறார். ஆனால், பாக்யா எல்லாவற்றையும் தாங்கி கொள்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில், பாக்யாவின் மாமனார் ராமமூர்த்தி மருமகள் பாக்யாவுக்கு ஆதரவாகப் பேசுகிறார். பாக்யான் ஏன் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும், எல்லா பிரச்னைக்கு காரணம் கோபி செய்த தவறுதான். அதனால், கோபிதான் வீட்டை விட்டு போக வேண்டும் என்று கோபியின் கைகளைப் பிடித்து இழுத்துச் சென்று வெளியே தள்ள முயற்சி செய்கிறார். ஆனால், ஈஸ்வரி பாட்டி தடுத்து விடுகிறார்.
எல்லோரும் பாக்யாவுக்கு ஆதரவாகப் பேசுவதைப் பார்த்து கொந்தளிக்கும் கோபி, உடனடியாக எல்லோரும் பாக்யாவை ஒரு தியாகி மாதிரி பேசுகிறீர்கள் என்று கோபமாகக் கேட்கிறான்.
ஆரம்பம் முதல் அம்மாவுக்கு ஆதரவாக இருக்கும் எழில், கோபியின் கேள்வியால் கோபமடைகிறான். அதோடு எழில், “அம்மா வாம்மா போகலாம். இனிமேல் நீ யாருக்கும் யாருக்காகவும் நீ அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லைம்மா.” என்று கூறுகிறான்.
இதைக் கேட்டு கோபி மிகவும் நக்கலாக, ‘டேய், நாட்ல எல்லாக் குடும்பத்திலும் இப்படிதாண்டா நடக்குது. என்ன உன் அம்மா மட்டும் பெரிய தியாகி மாதிரி சொல்ற.” என்று கேட்கிறான்.
இதற்கு எழில், “இல்லைப்பா, இல்லை, என் அம்மா மட்டுமில்லை. ஒவ்வொரு அம்மாவும் தியாகம் பண்றவங்கதான். அதனால்தான், குடும்பம்னு ஒன்னு ஓட்டிகிட்டிருக்கு. நீங்கலாம் நினைச்சுகிட்டிருக்கீங்க. வெளியே போய் நாம நிறைய சம்பாதிச்சு வந்து கொட்டுறோம். இல்லைனா இங்க எதுவுமே நடக்காதுனு. அதெல்லாம் ஒரு மித் பா. அதெல்லாம் ஒரு போலியான நம்பிக்கை. வெளியில போய் பாருங்க. எத்தனையோ பெண்கள், கணவன் இல்லாம புள்ளைங்கள வளர்த்து ஆளாக்குறாங்க… அப்ப அவங்களையெல்லாம் நீங்க என்ன சொல்வீங்க? மத்தவங்களுடைய உழைப்பை மதிக்கனும். வாயவிட்டு பாராட்டனும் அங்கீகரிக்கனும். என்னைக்காச்சும் இதையெல்லாம் நீங்க செஞ்சிருக்கீங்களா? எங்கம்மாவைப் பார்த்து இன்னைக்கு நீ இவ்ளோ வேலைப் பார்த்திருக்கியா அப்படினு நீங்க கேட்டிருக்கீங்களா? உனக்கு கை கால் வலிக்குதா தலை வலிக்குதா? நீ சாப்டியா இல்லியா, இவ்வளவு வேலை பார்க்கிறியே, இன்னைக்கு ஒரு நாள் நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. இப்படியெல்லா, என்னைக்காச்சும் ஒரு நாள் ஒரே ஒரு நாள் நீங்க சொல்லியிருக்கிங்களா?” என்று எழில் தனது தந்தை கோபியை நாக்கைப் புடுங்கிக்கொள்கிற மாதிரி கேட்கிறான்.
கோபி மாதிரி ஈகோயிஸ்ட் கணவர்களால் அல்லல்படும் பெண்களின் குமுறலை எழில் தனது தாய் பாக்யாவுக்கு ஆதரவாகப் பேசும்போது பேசிய விஷயத்தைப் பார்த்து பாக்கியலட்சுமி சீரியல் பார்வையாளர்கல் பலரும் சபாஷ் எழில் என்று பாராட்டி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”