புலம்பெயர் மக்களின் ஆதரவை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கையில் புலம்பெயர் அலுவலகமொன்றை அமைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்நிலையில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வெற்றியடைய அனைத்து தரப்பினரின் ஆதரவும் அவசியமானது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (16) பிற்பகல் நடைபெற்ற “அறிஞர்களின் சங்கம் – 2022” விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டம் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும்
இதேவேளை, தற்போதைய அவசரகாலச் சட்டம் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாடு தற்போது ஸ்திரமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன, முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, அறிஞர்கள் சங்கத்தின் தலைவர் துலித பெரேரா, பொதுச் செயலாளர் உபாலி ஜயவர்தன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.