புதுடெல்லி: மத்திய அரசின் மின்னணு சந்தையில் ஆன்லைன் மூலம் ரூ.60 கோடிக்கு 2.36 கோடி தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவையொட்டி ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை வீடுகள்தோறும் தேசியக் கொடி யேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இதற்காக பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்கள், தனியார் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு அளவுகளில் தேசிய கொடிகள் விநியோகம் செய்யப் பட்டன.
மத்திய அரசின் https://gem.gov.in/ இணைய சந்தை மூலமாக மொத்த விற்பனை நடைபெற்றது. இந்த இணைய சந்தை மூலம் பல்வேறு மத்திய அரசு துறைகள், மாநில அரசுகள் ஆன்லைனில் தேசிய கொடியை கொள்முதல் செய்தன.
கடந்த ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை 2.36 கோடி தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.60 கோடியாகும்.
மத்திய அரசு துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களிடம் இருந்து வாங்க கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டில் மின்னணு இணைய சந்தை தொடங்கப்பட்டது. மத்திய தொழில் துறையின் கீழ் இந்த இணைய சந்தை செயல்படுகிறது.