சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்றிரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். அப்போது தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்த மனுவை அளிக்கிறார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், இரண்டு முறை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்துக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்து வலியுறுத்தினார். பிரதமர் தமிழகம் வந்தபோதும், அவரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தினார். ஆனாலும், நீட் தேர்வு விலக்கு மசோதா, ஜிஎஸ்டி நிலுவை, நதிகள் இணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
செஸ் ஒலிம்பியாட் போட்டி
இந்நிலையில், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடந்தது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜூலை 28-ம் தேதி நடந்த தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, போட்டியை தொடங்கி வைத்தார்.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று, செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்கு வருமாறு பிரதமரை நேரில் அழைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், முதல்வர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்ததால் அவரால் டெல்லி செல்ல முடியவில்லை. முதல்வர் மருத்துவமனையில் இருந்தபோது, அவரை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்தார். அப்போது, தன்னால் நேரில் வர இயலவில்லை என்றும், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்கு வரவேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று விழாவுக்கு பிரதமர் வந்தார்.
பிரதமர் பாராட்டு
சென்னை வந்து சென்ற பிரதமர் மோடி, செஸ் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘இதுபோன்ற இன்னும் பல உலகப் போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழகத்துக்கு தரவேண்டும் என்றும், தொடர்ந்து உங்களது ஆதரவை தமிழகத்துக்கு அளிக்க வேண்டும்’ என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நேரில் நன்றி தெரிவிப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து இரவு 9.40 மணிக்கு விமானத்தில் டெல்லி சென்ற முதல்வரை, டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் வரவேற்றனர். முதல்வருடன் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உதயச்சந்திரன் உள்ளிட்ட முதல்வரின் செயலர்களும் சென்றுள்ளனர்.
நேற்றிரவு டெல்லியில் தங்கிய முதல்வர், இன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவையும் அதைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரையும் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். குடியரசுத் தலைருடனான சந்திப்பின்போது, நீட் தேர்வு விலக்கு கோரும் மசோதாவுக்கான ஒப்புதல் அளிப்பது குறித்து முதல்வர் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார். அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வந்ததற்காக பிரதமருக்கு முதல்வர் நன்றி தெரிவிக்கிறார். அத்துடன், நீட் விலக்கு மசோதா, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, வரி பகிர்வின் மூலம் தமிழகத்துக்கு வரவேண்டிய தொகைகள், ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது, நதிநீர் இணைப்பு, மேகேதாட்டு விவகாரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.