சாத்தான்குளம்: `ரத்தக்கறை படிந்த ஆடைகளை குப்பைத் தொட்டியில் போட்ட போலீஸ்' – சிபிஐ குற்றப்பத்திரிகை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல் கடை வைத்திருந்த தந்தை மகனான ஜெயராஜ் – பென்னிக்ஸை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்று கொடூரமாக தாக்கியதில் அவர்கள் மரணமடைந்த சம்பவம் 2 வருடங்களுக்கு முன் நாட்டையே அதிர வைத்தது.

சாத்தான்குளம் பென்னிக்ஸ், ஜெயராஜ் – கொலை வழக்கு

இந்த சம்பவத்தை தமிழ்நாடு காவல்துறை விசாரித்த நிலையில் சி.பி.ஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்பு, விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ, வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 போலீஸாரை கைது செய்தனர். அதில் ஒருவர் நோயால் சிறையிலயே இறந்துவிட, மீதியுள்ள 9 பேர் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்கள்.

லாக்கப் மரணங்கள்

ஏற்கனவே 2027 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ தாக்கல் செய்தனர். அந்த அடிப்படையில் நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் விசாரணை நடந்த நிலையில், தற்போது 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

இது குறித்து வழக்கு நடந்து வரும் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற வட்டாரத்தில் விசாரித்தபோது, “இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை டாக்டர் வெண்ணிலா, கோவில்பட்டி சிறைக்கைதி ராஜாசிங் ஆகியோர் புதிய சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல்துறையினர் 19.6.2020 அன்று பஜாரிலிருந்து ஜெயராஜ் – பென்னிக்ஸை சட்டவிரோதமாக அழைத்து சென்று போலீஸ் ஸ்டேஷனிக் வைத்து கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன்

கடும் காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். அதன் பின்பே பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீஸ் தாக்கியதில் ஜெயராஜ் பென்னிக்ஸ் உடல்களிலிருந்து வந்த ரத்தம், போலீஸ் ஸ்டேஷன் சுவர், தரை அங்குள்ள பொருள்களில் தெறித்துள்ளது.

படுகாயத்துடன் அவதிப்பட்ட பென்னிக்ஸை சுவர், தரையில் சிதறிய ரத்தத்தை சுத்தம் செய்யவும் கட்டாயப்படுத்தியுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள், ஜெயராஜ் – பென்னிக்ஸுக்கு எதிராக ஒரே நோக்கத்துடன் சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.

அவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லும்போது ரத்தக்கறையுள்ள ஆடைகள் யாருக்கும் தெரியக்கூடாது என்பதால் மருத்துவமனையில் வைத்து ஆடைகளை மாற்றியுள்ளனர். பின்பு ரத்தக்கறை படிந்த ஆடைகளை குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர்.

சாத்தான்குளம்

சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன் சுவர்களில் இருந்த ரத்தமும், போலீஸார் தாக்கிய லத்திகளில் இருந்த ரத்தமும் தடய ஆய்வில் உறுதியாகியுள்ளது. இதன் மூலமும் குற்றம்சாட்டப்பட்ட 9 பேர் மீதான குற்றச்சாட்டு உறுதியாகிறது என்று கூடுதல் குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது” எனக் கூறினார்கள்.

சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு வருவதற்குள் இன்னும் என்னென்ன அதிர்ச்சியான தகவல்கள் வெளிவருமோ?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.