பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தல் தொடர்பில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புகள் தொடர்பில்

ஐக்கிய நாடுகள் சபையின் 2012 ஆம் ஆண்டு விதிமுறைகள் எண். 01 இன் பிரகாரம் பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தல் தொடர்பில் 577 நபர்கள் மற்றும் 18 அமைப்புகள் 2021 ஆம் ஆண்டில் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், புலனாய்வு பிரிவுகள், சட்ட அமலாக்கள் பிரிவினர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு அடங்கிய குழுவொன்றினூடாக பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தல் தொடர்பில் மேற்குறிப்பிடப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புகளின் செயற்பாடுகள் குறித்து கடந்த சில ஆண்டுகளாக ஆய்வு செய்யப்பட்டு, கிடைத்த ஆதாரங்களுக்கமைய பாதுகாப்பு அமைச்சில் நடாத்தப்பட்ட பல சுற்று கலந்துரையாடல்களுக்குப் பின், கறுப்புப் பட்டியலிலிருந்து நீக்கப்பட மற்றும் சேர்க்கப்பட வேண்டிய நபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

அதனடிப்படையில், 577 நபர்கள் மற்றும் 18 அமைப்புகளிலிருந்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவியளித்தல் செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டாத 316 நபர்கள் மற்றும் 06 அமைப்புகளை பட்டியலிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தல் தொடர்பில் சமீபத்தில் இனம்காணப்பட்ட 55 நபர்கள் மற்றும் 03 அமைப்புகளை புதிதாக அப்பட்டியலில் உள்ளடக்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பாதுகாப்புச் அமைச்சின் பரிந்துரையின் பேரில் 2022 ஜூன் 29, அன்று வெளிவிவகார அமைச்சின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பின், 316 நபர்கள் மற்றும் 15 அமைப்புகள் 2022 ஆகஸ்ட் 01 ஆம் திகதி, இல 2291/02 அதிவிசேட வர்த்தமானி மூலம் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவியளித்தல் தொடர்பில் நபர்கள் மற்றும் அமைப்புகள் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கல் மற்றும் அகற்றல் நடைமுறையானது, அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் நீண்ட கால அவதானிப்பு மற்றும் கவனமாக தொடர் ஆய்வு நடவடிக்கைகளின் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வருவது வழமையாகும்.

மேலும் எதிர்காலத்தில், இந்த நிறுவனங்கள் தனிநபர்கள் அல்லது அமைப்புகளை தொடர்ந்து கண்காணிக்கும் என்றும், அந்நபர்கள் அல்லது அமைப்புகள் பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டால், அவர்களை கருப்புப்பட்டியலில் சேர்ப்பதற்கு பாதுகாப்பு அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.