8 வயது யானை குறித்து பரவிய வதந்தி – ட்ரோன்கள் மூலம் தேடும் பணி தீவிரம்

கோவை அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள யானையை ஆற்றுப்படுகையை ஒட்டிய வனப்பகுதியில் தேடும்பணியில் தமிழக, கேரள வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவை ஆனைகட்டி பட்டிசாலை என்கிற பகுதியில் தமிழக கேரளா எல்லையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, ஆற்றின் ஓரம் நின்றுகொண்டிருந்ததை மலைக் கிராம மக்கள் பார்த்துள்ளனர். ஒரே இடத்தில் யானை நின்றதையும், தண்ணீர் குடிக்க சிரமப்பட்டதையும் பார்த்து வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது என இரு மாநில வனத்துறையினர் வேடிக்கை பார்த்ததாக மலைக் கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்த புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக, யானைக்கு சிகிச்சை அளிக்க இருமாநில வனத்துறையினரும் நடவடிக்கை மேற்கொள்வதாக தமிழக வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ தெரிவித்தார். இந்நிலையில், யானை எங்கும் தென்படாததால், அதனை தேடும்பணியில், தமிழக, கேரள வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் யானை நெடுந்தொலைவு போயிருக்க வாய்ப்பில்லை என்பதால் ஆற்றுப்படுகை ஓரமாக வனப்பகுதியில் தேடும் பணி நீடிக்கிறது. ஆனைகட்டி பகுதியில் கோவை மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் அஷோக்குமார் உள்ளிட்டோர் ட்ரோன் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். யானை இறந்திருக்கலாம் என்று செய்தி பரவியநிலையில், யானையை நேரில் பார்க்கும்வரை உறுதிபடுத்தமுடியாது என கேரள வனத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரியும் யானையை கண்டுபிடிக்க கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம் என்ற கும்கி யானையை வனத்துறையினர் அழைத்து வந்துள்ளனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் கும்கி யானை உதவியுடன், காயமடைந்த யானையை தேட வனத்துறையினர் ஆயத்தமாகியுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.