லாகூர்: பாகிஸ்தானில் பேருந்தும் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து மீட்புக் குழு அதிகாரிகள் கூறியதாவது:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூரிலிருந்து 350 கி.மீ. தொலைவில் உள்ள முல்தான் நெடுஞ்சாலையில் பேருந்தும் எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நிகழ்ந்தது. அதிவேகமே இந்த விபத்துக்குக் காரணம் என தெரியவந்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது மிகப்பெரிய சாலை விபத்தாகும் இது.
கராச்சியிலிருந்து லாகூர் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து எண்ணெய் டேங்கர் லாரியுடன் பயங்கரமாக மோதிக் கொண்டதில் தீப்பிடித்து எரிந்தது. இதில் பேருந்தில் இருந்த 20 பயணிகளும் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், ஆறு பயணிகள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
தீயில் கருகி உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு சிதைந்து போயுள்ளது. எனவே, அந்த உடல்கள் அனைத்தும் டிஎன்ஏ பரிசோதனைக்குப் பின்பே அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.