டேராடூன்: சியாச்சினில் காணாமல்போன இந்திய ராணுவ வீரர் ஒருவரின் உடல் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டம், துவாரஹத் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் ஹர்போலா. இவர் ராணுவத்தின் 19-வது குமாவோன் படைப்பிரிவில் 1975-ல் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் 1984-ல் ‘ஆபரேஷன் மேகதூத்’ ராணுவ நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானுக்கு எதிராகப் போரிட 20 வீரர்கள் கொண்ட குழுவினர் உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் பனிப் புயலில் சிக்கி இறந்தனர். இவர்களில் 15 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. சந்திரசேகர் உள்ளிட்ட 5 பேரின் உடல்களை மீட்க முடியவில்லை.
இந்நிலையில், சியாச்சினில் உள்ள பழைய பதுங்கு குழி ஒன்றில் ராணுவ வீரர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது சந்திரசேகர் ஹர்போலாவின் உடல்என அடையாளம் காணப்பட்டுள்ளது. சந்திரசேகரின் மனைவி சாந்தி தேவி, தற்போது குமாவோன் மாவட்டம், ஹல்டுவானி பகுதியில் வசிக்கிறார். அங்கு சந்திர சேகரின் உடல் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டது.