ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்ட குலாம் நபி ஆசாத், அடுத்த சில மணிநேரத்திலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியில் புதிதாக பிரசாரக் குழு, அரசியல் விவகாரக் குழு, தேர்தல் அறிக்கைக் குழு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உருவாக்கப்பட்டன. இதில் பிரசாரக் குழு தலைவராக குலாம் நபி ஆசாத்தை கட்சியின் தேசிய தலைவர் சோனியாகாந்தி நேற்று நியமித்தார். ஆனால் நியமித்த சில மணி நேரத்தில் குலாம் நபி ஆசாத் அப்பதவியில் இருந்து விலகினார்.
அதோடு மாநில அரசியல் விவகாரக் குழுவில் இருந்தும் அவர் ராஜினாமா செய்துள்ளார். தமது உடல்நிலை காரணமாக பதவியை ஏற்க மறுத்து சோனியாகாந்திக்கு அவர் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
குலாம் நபி ஆசாத்தின் உதவியாளரான குலாம் அகமது மிர் ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அப்பொறுப்புக்கு விகார் ரசூல் வானி நியமிக்கப்பட்டுள்ளார். உரிய ஆலோசனை நடத்தாமல் புதிய பிரிவுகள் உருவாக்கப்பட்டதாலும், குலாம் நபி ஆசாத் பதவி
விலகியதாலும், மேலும் சில நிர்வாகிகள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM